×

‘சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே’ என கலியுகத்திற்கு உணர்த்த சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: கொட்டும் மழையிலும் ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்

திருமலை: ‘சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே’ என கலியுகத்திற்கு உணர்த்தும் வகையில் சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணனாக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி நடைபெற்றது. 6ம் நாளான நேற்றுமுன்தினம் காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். மாலை தங்க தேரோட்டம் நடந்தது. 32 அடி உயரமுள்ள பாயும் குதிரைகளுடன் கூடிய தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் பிரமோற்சவ 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் நான்கு மாட வீதியில் உலா வந்தார். ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலத்தில் வருவதன்மூலம் சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே என கலியுகத்திற்கு உணர்த்தும் வகையில் இந்த சூரிய பிரபை உற்சவம் நடந்தது.

வேதமந்திரங்கள் முழங்க காலை 6 மணியளவில் சூரிய உதயத்திற்கு முன்பு ஏழுமலையான் கோயில் அருகே கிழக்கு திசை நோக்கி மலையப்ப சுவாமி காட்சி தர, அப்போது சூரிய கதிர்கள் மலையப்ப சுவாமியின் மீது படர்ந்ததும் வேதமந்திரங்கள் முழங்க மகா தீப ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த கொட்டும் மழையிலும் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து மாடவீதியில் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் கலாச்சார நடனங்கள் ஆடியபடி கலைஞர்கள் ஊர்வலமாக வந்தனர். இன்றிரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடக்கிறது. வீதிஉலாவில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடாக, கேரள, அஸ்சாம், மஹாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், தப்பட்டம், பொய்கால் குதிரையாட்டம், பஜனைகள் செய்தபடியும் சுவாமியின் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

 

The post ‘சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே’ என கலியுகத்திற்கு உணர்த்த சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி: கொட்டும் மழையிலும் ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Malayappa Swami ,Surya ,Kaliyuga ,Thirumalai ,Badri Narayana ,Kali Yuga ,Lord ,Tirupati Eyumalayan Temple Annual Promotsavam ,Dinakaran ,
× RELATED அண்டி பிழைத்து சமீபத்தில்...