×

வேலூர் சத்துவாச்சாரி நிதிநிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ₹14.5 லட்சம் மோசடி

*எஸ்பி அலுவலகத்தில் பதிக்கப்பட்டவர் புகார்

வேலூர் : சத்துவாச்சாரியில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ₹14.5 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள்குறை தீர்வு கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிப்பார்கள்.

அந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களை சேர்ந்த எஸ்ஐக்களை அழைத்து தீர்வு காணும்படி உத்தரவிடப்படும். இந்நிலையில் நேற்று எஸ்பி மதிவாணன் தலைமையில் அந்தந்த சப்-டிவிஷன் டிஎஸ்பிகளை பிரித்திவிராஜ் சவுகான், பழனி, ராமச்சந்திரன் வரவழைத்து அவர்களையும் மனுக்களை பெற செய்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் எஸ்பி அலுவலக வளாகத்திற்குள் 2 இடங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு கூட்டம் நடந்தது. இதில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மனுக்களை டிஎஸ்பிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது, அணைக்கட்டு தாலுகா ஆண்டிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா பழையனூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் எனது மகளுக்கு வேலூர் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி அவர் கேட்டபடி ரூ.2.40 லட்சம் கொடுத்தேன்.

ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டபோது வட்டி இல்லாமல் 4 மாதம் தவணையாக தருவதாக கூறினார். ஆனால் இதுவரை பணம் தராமல் தட்டிக்கழித்து வருகிறார். எனவே என்னுடைய பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வந்த ஒரு நிதி நிறுவனத்தில் ₹1 லட்சம் செலுத்தினால் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டி தருவதாக கூறினர். இதனை நம்பி நானும், எங்களது உறவினர்களும் ரூ.14.50 லட்சம் கொடுத்தோம்.

ஆனால் அவர்கள் வட்டி மற்றும் அசல் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர். எங்களை போன்று பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வேலூர் மாவட்டம் சேர்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் வீட்டின் அருகே கம்பெனி நடத்தி வருகிறோம். கம்பெனியின் அருகே பங்க் கடை நடத்தி வரும் ஒருவர் டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்று வருகிறார். இதனால் அங்கு பலர் மது குடித்து ரகளை செய்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் அப்பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஆய்வு நடத்தி பங்க் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வேலூர் சங்கரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேலப்பாடியில் உள்ள ஒருவர் பிரிண்டிங்பிரஸ் வைக்க உள்ளதாகவும், அதற்காக ₹10 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். அதற்கு வட்டியும் அசலும் மொத்தமாக ஒரு வருடத்தில் தருவதாக தெரிவித்தார். அதை நம்பி கடந்த 2021ம் ஆண்டு ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் இரண்டு வருடங்களாக பணத்தை திருப்பி தரும்படி கேட்டாலும் பணத்தை தரவில்லை.

மேலும் என்னை அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் அவருடன் சில ரவுடிகள் என் வீட்டிற்கு பணத்தை திருப்பி கேட்டால் குடும்பத்தோடு ஒழித்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனர். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

`டிஎஸ்பிக்கள் உடனடி விசாரணை’- எஸ்பி தகவல்

வேலூர் எஸ்பி மதிவாணன் நிருபர்களிடம் கூறுகையில், `எஸ்பி அலுவலகத்தில் வாரந்தோறும் மனுக்கள் பெறப்படுகிறது. கடந்த வாரம் புகார்கள் மீது விரைந்து தீர்வு காண சிறப்பு மனுக்கள் மேளா நடத்தப்பட்டது. அப்போது 200 புகார்கள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டது. ஒவ்வொரு வாரமும் நடந்து வரும் குறைதீர்வு கூட்டத்தின்போது பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்களிடம் வழங்கி வருகிறோம்.

ஆனால் இன்று(நேற்று) முதல் அந்தந்த சப்-டிவிஷன் பகுதி டிஎஸ்பிக்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி இன்று பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பகுதி டிஎஸ்பிக்களிடம் சேர்ப்பித்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி டிஎஸ்பிகள் இந்த கூட்டத்திற்கு வரவழைக்கப்படுவர். குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காக வார்டுகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அது ஒரு சங்கிலித் தொடர் போன்றது.

போலீசார் ஒரு 50 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் மேலும் 50 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இதற்கான பலன் விரைவில் கிடைக்கும். மேலும், போதைப் பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். வேலுாரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்த வேண்டி உள்ளது. அதற்கான செயல்பாடுகளில் இறங்கி உள்ளோம். விரைவில் மாற்றங்கள் நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post வேலூர் சத்துவாச்சாரி நிதிநிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ₹14.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Vellore Chhatawachari ,SP ,Vellore ,Chhatawachari ,Vellore SP ,Vellore Chattavachari ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...