×

ஊட்டி அருகே போலீஸ் சோதனையில் கள்ளத்துப்பாக்கி, கத்தியுடன் வேட்டை கும்பல் சிக்கியது

ஊட்டி : தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. மும்மாநில எல்லைப்பகுதி என்பதால் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், திருட்டு செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவின் பேரில் எல்லையோர சோதனைச்சாவடிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி ஊரக போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாபு, போலீசார் சேதுலிங்கம், தினேஷ்குமார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணியளவில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் 5 பேர் கொண்ட கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக தமிழ் மற்றும் மலையாளம் கலந்து பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை முழுவதுமாக சோதனையிட்டனர்.

சோதனையில் அந்த காரின் பின்பகுதி, இருக்கைகளுக்கு அடியில் ஒரு கள்ளத்துப்பாக்கி, 5க்கும் மேற்பட்ட கத்திகள், டார்ச் லைட் உள்ளிட்டவை இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து காந்தலில் உள்ள ரூரல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், காரில் வந்தது கூடலூர் ஓவேலியை சேர்ந்த சையது முகமது (37), கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியை சேர்ந்த அலி (56), ஹாரீஸ்மோன் (24), சாஹில்கான் (22), நவாஸ் சேரீப் (33) ஆகியோர் என்பதும், இறைச்சிக்காக காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது.

பிடிபட்டவர்கள் வனவிலங்குகள் வேட்டையாட வந்ததாக கூறிய நிலையில் காவல்துறை தரப்பில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி வடக்கு வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினரிடம் 5 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.
இது குறித்து காவல்துறை டிஎஸ்பி முத்தரசு கூறுகையில், ‘‘ஊட்டி ரூரல் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த காரில் அனுமதி இல்லாத ஒற்றைக்குழல் துப்பாக்கி, 7 சிறிய கத்திகள், டார்ச் லைட், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவை இருந்தது. விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட வந்தது தெரிந்ததால், கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.கூடுதல் விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்’’ என்றார்.

தொடர்ந்து சிக்கும் வேட்டை கும்பல்கள்

நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டு காட்டு மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை கேரளாவில் விற்பனை செய்து வந்ததாக கூடலூரை சேர்ந்த 7 பேரை கடந்த வனத்துறையினர் கைது செய்தனர். நடுவட்டம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததாக 5 பேரை வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். இந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 5 பேர் கொண்ட கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட வந்து சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வன விலங்குகள் வேட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post ஊட்டி அருகே போலீஸ் சோதனையில் கள்ளத்துப்பாக்கி, கத்தியுடன் வேட்டை கும்பல் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,District SP Nisha ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் கடும் குளிர் சாலையோரத்தில்...