×

மார்த்தாண்டம் அருகே தினமும் அடி-உதை; கணவரின் டார்ச்சரால் மனைவி பலி: தந்தை பரபரப்பு புகார்; 3 பேர் மீது வழக்குப்பதிவு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே கணவர் தினமும் அடித்து உதைத்து டார்ச்சர் செய்ததால் தனது மகள் இறந்துவிட்டதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் மேக்கனாம்விளையை சேர்ந்தவர் ஏசாயா (68) மகள் ஜெயராணி (37).

இவரது கணவர் காஞ்சிரக்கோடு கழுவந்தட்டுவிளையை சேர்ந்த வின்ஸ்குமார். மெக்கானிக் மற்றும் டிரைவிங் வேலையும் செய்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜெயராணி வீடு திரும்பினார். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு ஜெயராணி தூங்க சென்றார். மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மீண்டும் நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மறுநாள் காலையில் ஜெயராணி எழும்பவில்லை. சந்தேகமடைந்த கணவர் எழுப்பினார். அப்போதும் எழும்பாததால் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஜெயராணியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையறிந்த ஏசாயா, அதிர்ச்சியுடன் பதறியடித்தவாறு மருத்துவமனைக்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து ஏசாயா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

அதில், எனது மகள் ஜெயராணிக்கும், வின்ஸ்குமாருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம். வின்ஸ்குமாரின் தந்தை ராஜமணி, தாயார் செல்வபாய் ஆகியோரது தூண்டுதலின்பேரில் எனது மகளை அடித்து உதைப்பார். இதனால் மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று வின்ஸ்குமார் தாக்கியதால் தான் ஜெயராணி இறந்துவிட்டார். இதற்கு காரணமான வின்ஸ்குமார், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

போலீசார் வின்ஸ்குமார், ராஜமணி, செல்வபாய் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராணியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் தான் ஜெயராணியை வின்ஸ்குமார் தாக்கியதில் இறந்தாரா? அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்தாரா? என்பது தெரியவரும். அதன்பின்னரே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post மார்த்தாண்டம் அருகே தினமும் அடி-உதை; கணவரின் டார்ச்சரால் மனைவி பலி: தந்தை பரபரப்பு புகார்; 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags :
× RELATED மதுரையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த உதவி ஜெயிலருக்கு அடி, உதை!!