×

ராஜகோபுர மனசு

பகுதி 6

இரவீந்திரப் பெருந்தச்சன் வணங்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், மனம் முழுக்க சூழ்ந்த குழப்ப மேகங்களால், இரவு முழுதும் உறங்காமலிருந்த மன்னர் வீரவல்லாளன், கட்டிலைவிட்டெழுந்து, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். மன்னரின் விழிப்பைக்கண்டு, ராணிகளிருவரும் உறக்கம் கலைந்தெழுந்து, கட்டிலுக்கு இருபக்கத்திலும் அமர்ந்தபடி, மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நடந்துகொண்டிருந்த மன்னர், என்னநினைத்தாரோ தெரியவில்லை, மாதப்ப தண்டநாயக்கரை உடனே அழைத்துவர உத்தரவிட்டார். ‘‘இவ்வளவு விடிகாலையிலா?’’ என்று இளையராணி சல்லம்மாதேவி கேட்டதற்கு, ‘‘அவசரமெனச்சொல் சொக்கி’’ என பதிலளித்தார். வேறுசில மூத்த அமைச்சர்களையும் உடனே அழைத்து வரும்படி, கட்டளையிட்டார்.

சில நிமிடங்கள் வானம் பார்த்து வெறிந்தார். சட்டென இளையராணியை நோக்கி, ‘‘சொக்கி, இது சரியாய் வருமா?’ என்றார். நிமிர்ந்து பார்த்த இளைய ராணி, ‘‘எது’’ என்றதும், ‘‘நான்குதிசைக்குமான இந்த கோபுரப்பணி’’ என்றார். மன்னரின் வார்த்தைக்கு, தளர்வாய் கட்டிலில் சாய்ந்திருந்த மூத்தராணி பதைத்தார். ‘‘எல்லாம் கூடிவர, எல்லோரும் தேர்நகர முன்னெடுக்க, முட்டுக் கட்டையாய் எதற்கு இந்தச் சொல்’’ என அலறினார். மூத்தராணியை மன்னர்கையமர்த்தினார். ‘‘நீ சொல் சொக்கி. இது சரியாய் வருமா?’’ என்றார்.

சில நொடிகள் அமைதியாக நின்ற இளையராணி, ‘‘ஏன் சரிவராது?’’ என எதிர்கேள்வியெழுப்பினார். மன்னர் பெருமூச்சிட்டார். ‘‘போர்க்களத்தில் நிற்காமல், நான் புறமுதுகிட்டவன் சொக்கி நின்றுப் போராடத் தெரியாமல், ஓடி வந்தவன் நான். இந்த கோபுரப்பணி, எவ்வளவு பெரியசெயல். கிட்டத்தட்ட, பத்து, பதினைத்து வருடங்களாகுமென அமைச்சரவையின் அறிக்கை சொல்கிறது. அப்பேர்ப்பட்ட இப்பணி, என்னாலாகுமாவென்கிற உறுத்தல், இன்னும் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் வடக்கத்தான் வம்பிழுத்தால், சமாளிக்க முடியுமாவென
கவலையுமெழுகிறது.’’ தலைகுனிந்தபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இளையராணி, நிமிராமல், தரையைப் பார்த்தபடி பேசினார். ‘‘நீங்கள் மன்னரில்லை. அக்காவும், நானும் அரசிகளில்லை. இதோ, அழைத்துவர சொன்னீர்களே. அவர்கள் படைத்தளபதிகளோ, அமைச்சர்களோயில்லை.

நாமெல்லோரும் சிவசேவையை செய்து முடிக்க, கைலாயம்விட்டு நகர்ந்து, இந்த அருணைக்கு விஜயம் செய்துள்ள சிவபூதகணங்கள்’’ என முடித்தார். ‘‘சிவபூதகணங்கள்’’ என முடிக்கும்போது, இளையராணி நிதானமாக, மன்னரை நிமிர்ந்துப் பார்த்தார்.‘‘என்னப் பார்க்கிறீர்கள்? இதுசபையில், நீங்கள் கர்ஜித்ததுதான். அப்படியான சிவபூதகணங்களால் ஆகாத செயல்கள் உண்டாயென்ன? எம்மன்னரால் இது ஆகும். அவரால் நிச்சயம் இப்பணி நடக்கும்’’.

‘‘ஆனாலும், செலவுகள் பயமுறுத்துகிறது சொக்கி. இப்போதுதான் நிமிர்ந்திருக்கிறோம். ஜனங்கள் இப்போதுதான் கவலைகளற்று அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிம்மதிச் சூழலில், மீண்டும் கிட்டத்தட்ட போருக்கு நிகரான இந்தப்பணி சரியா? எதுயெப்படியானாலும், செலவுகள் செலவுகள் தானே சொக்கி.’’‘‘உண்மை. ஏற்கனவே ஸ்ரீராஜேந்திரரால் எழுப்பப்பட்ட கிளிகோபுரத்தை மையமாகக்கொண்டு, நான்கு திசைகளிலும் கோபுரங்களென்பதும், பழையமதில்சுரோடிணைத்து, திசைகள் சுற்றிலும், புதிதாக கட்டப்போகிற பிரம்மாண்டமானசுவரென்பதும், பெரும்செலவுதான். சற்று கூடுதலாகவே ஆகுமென்றுதான் தெரிகிறது. கட்டுமானப் பணிகளும் நீண்டகாலமாகுமென தோன்றுகிறது.’’

‘‘ஸ்தபதிகளிடமும், சிற்பிகளிடமும், நான் பேசிப் பார்த்தவகையில், கோபுரப் பணிமுடிய, பத்திலிருந்து, பதினைந்து வருடங்களாகுமென சொல்கிறார்கள். ஏன், இருபது வருடங்கள்கூட ஆகலாமெங்கிறார்கள். பாறைகளுக்கு பெரியதேவையிருக்காது. செஞ்சியிலிருந்தும், வேலூர் பக்கத்திலிருந்தும் கொண்டு வந்து, கோபுரத்தின் அடிப்பீடங்களுக்கான வேலைகளை செய்துவிடலாமென்கிறார்கள். அவசியமெனில், புதுக்கோட்டைப்பக்கம் போகலாமென்கிறார்கள். ஆனால், மேலெழும்பும், நிலைகளுக்கும், சுதைசிற்பங்களுக்கும், நிறைய வேகவைத்தக்கற்கள் தேவைப்படுமென சொல்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபது சூளைகளின் செங்கற்கள் மொத்தமாக ஆகுமென்கிறார்கள். அதுவும் குத்துமதிப்புக் கணக்குத் தான்.

அவ்வளவு சூளைகள் நம்தேசத்திலில்லையென்பதால், இங்கிருந்து அரைநாள் பயணத் தொலைவிலுள்ள, கொங்குநாட்டின் திருச்செங்கோடு, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்துதான் காசுகொடுத்து வாங்கவேண்டுமென்கிறார்கள். வண்டி வண்டியாய், சாரக்கொம்புகளும், மூடைமூடையாய் சணல்கயிறுகளும் தேவையிருக்குமென்கிறார்கள். இவை ஒரு பக்கமிருந்தாலும், ‘‘பணத்தட்டுப்பாடு’ காரணமாக, கோபுரப்பணி தடைபடாது பார்த்துக்கொள்ள வேண்டும். தடைப்பட்டால் மன்னருக்காகாது’’ என்று பயமுறுத்துகிறார்கள்.

‘‘உண்மையில், செலவினங்களுக்கு நமக்குபயமில்லை. பொய்த்துப்போகாத வானத்தால், இந்தமுறை நல்லவிளைச்சல், எவரும் வரிபாக்கி வைக்காதபடிக்கு நல்ல வசூல். நமக்கு கட்டுப்பட்ட சிற்றரசுகளிருந்தும், கிராமத்து சபைகளிலிருந்தும், எப்போதுமில்லாவகையில், இம்முறை நல்ல வரிஈட்டல். மூன்று வருடத்திற்கான வருமானங்கள், கஜானாவை நிரப்பியுள்ளன. ஒருவகையில், அவையெல்லாம், இந்தத் திட்டத்திற்கு உதவக்கூடும்.

ஆனால், இந்தக் காசுகள் நமக்குப் போறாது. ஈசன் கருணையில், இந்தவசூல் தொடர்ந்தால் ஒரு கவலையுமில்லை. ஆனால்?’’ இளையராணி சொல்லச்சொல்ல, ‘‘அட’’ என்கிற பாவனையில், மன்னரும், மல்லமாதேவியும் வியப்புடன் பார்த்து கொண்டேயிருந்தனர். ‘‘சபாஷ்’’ என்கிற பாராட்டு, இருவர்கள் மனதில் பொதுவாக ஓடியது. இளையராணி தொடர்ந்தார்.  ‘‘ஒருவேளை கோபுரப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, மழை பொய்த்துப்போனால்? அனல்பூமியானாலும், அருணையில், விவசாயமே பிரதானம். அது பாதிப்படையும் போது, பெரும் நிதிச்சுமை கூடுகிற அபாயமுண்டு. நிதிச்சுமை கூடும்போது, எங்கு கைவைப்போம்? வரிவிதிப்பில்.

அது யார்தலையில் விழும்?. மக்கள் தலையில். அப்படி விழும்போது ஜனங்கள் முணுமுணுக்க வாய்ப்புண்டு. கோபுரகட்டுமானப்பணியை, தேவையில்லாத வேலையென எதிர்க்க வாய்ப்புண்டு. அப்படியொரு நிலைமையுண்டானால், எப்படி சமாளிப்பதென அமைச்சரவை யோசிக்க வேண்டும். இதெற்கெல்லாம் தெளிவான திட்டங்களை வரையறுக்கவேண்டும்.’’ அனைத்தையும் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்த மன்னர் வீரவல்லாளன், ‘‘அமைச்சரவை யோசிப்பது இருக்கட்டும், இவ்வளவும் யோசித்தநீ, அதற்கும் யோசித்திருப்பாயே. அதைச்சொல்’’ என்றார். சிலநொடிகள் மன்னர்முகம் பார்த்த சல்லம்மா தேவி, பேச்சைத்தொடர்ந்தாள்.

‘‘ஒருவழி யோசித்திருக்கிறேன். அது மாமன்னர் ராஜராஜசோழரின் வழி’’
‘‘ராஜராஜசோழரின் வழியா? அதென்ன? சொல், சொல்’’ மன்னர் ஆர்வமானார்.

‘‘பெரிய கோயில் கட்டும்முன், மாமன்னர் உடையார் மக்கள்முன் தோன்றி, ‘‘இந்த சிவசெயலை, நான் செய்யபோவதில்லை. நாம்தான் செய்யப்போகிறோம். அதனால் அவரவர் அபிப்ராயம் இங்கு சொல்லுங்கள்’’ என்று பேசினாராம். ‘‘இது உங்கள் கோயில் என்பதால், உழைப்பைத்தவிர, உங்களின் பங்காக ஏதேனும் இருக்கவேண்டும். ஆனால் அதுகட்டாயமில்லை’’ என்றாராம். நாம் கட்டுமானப் பணிகளை எப்படி துவங்குவது என்பதை மக்களிடமே விட்டுவிட்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம். இப்போது, ராஜராஜரைப் போல, ஜனங்களின் பங்காக, ஒருகுந்துமணிபொன்னாவது, இருக்கவேண்டும் என்பதை வேண்டுகோளாக மன்னர் வைக்கவேண்டும். கோபுரப்பணிகளில் ஒவ்வொருயினத்தவர்கும், ஒரு பொறுப்புண்டு என்பதை புரியவைக்கவேண்டும்.’’

‘‘அரசே, இதுகாலத்திற்கும் நிற்கப்போகும் செயல். இதில் கடுகளவும் தயக்கம் வேண்டாம். இந்த செயலில், மன்னரைத் தவிர எவர் பெயரும், நாளையவரலாற்றில் தெரியபோவதில்லை. ஆனால் கைலாச சபையின் முன், மொத்த ஹோய்சாலத்தின் முகமும்பதியும், காரணம், இந்தசெயல், நம்பிறப்பிற்கான வரம். எனவே இச்செயலைமுடிக்க, தங்களுக்கு தயக்கமே வேண்டாம்.’’
‘‘எங்கே, ஒருமுறை கண்கள்மூடி கற்பனை செய்து பாருங்கள். நான்கு திசைகளிலும் கோபுரங்கள். அதன் நடுவே நம் அருணாசல ஈசன்.

எத்தனை அழகுக்காட்சி. அதை, அந்தக் கற்பனையை, நிஜமாக்கித் தருவதே, இந்த அருணை ஈசனுக்கு நாம் தருகிற காணிக்கை. பரிசு. படையல், எல்லாம்.’’ என இளையராணி முடித்தாள். பேசி முடித்ததும், இளையராணி, வேகமாகப்போய், கட்டிலின் மறுமுனையில் அமர்ந்து கொண்டு, வங்கிமோதிரங்கள் அணிந்தவிரல்களால், தன்முகம் பொத்திக்கொண்டார். மெல்ல விசும்பியவர், குலுங்கிக்குலுங்கியழுதார். தங்கை அழுவதைக்கண்ட மூத்தராணி எழுந்து, கட்டிலின் மறுமுனைக்குப்போய், அணைத்துக்கொண்டார். முழுகைதேய்த்து சமாதானம் செய்தார்.

அத்தனையையும் வைத்தகண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மன்னர், இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்த மாதப் தண்டநாயக்கர் மற்றும் அமைச்சர்களை, ‘‘வாருங்கள்’’ என்பது போல தலையாட்டி வரவேற்று, அமரும்படி ஆசனம் காண்பித்தார்.

அவர்களைக்கண்டதும், இளையராணி கண்கள் துடைத்து சகஜமானார். அமர்ந்தவர்களிடம், மன்னர் தன் தயக்கத்தை, வெட்கப்படாது விவரித்தார். தலையாரிகளின் பதில்களை விவாதித்தார். கோபுரப்பணிகளின் சரி, தவறுகள், சாதகபாதங்கள் பேசியலசினார். குறிப்பாக, செங்கற்கள் தட்டுப்பாடு குறித்து, கேட்டுத்தெரிந்து கொண்டார். நடுவே, இளையராணியை சிலாகித்தார். அவர்கூறிய விவரங்கள் பற்றி பிரமித்தார்.

குறிப்பாக, ‘‘நான்கு திசையிலும் கோபுரங்கள், நடுவே நம் ஈசன்’’ என அவர்கூறிய கற்பனையை சிலாகித்தார். கண்கள் மூடாமலே எல்லோரும், நான்கு திசைகளிலும் கோபுரங்கள் என்கிறகாட்சியை, கற்பனை செய்து பார்த்தார்கள். உள்ளுக்குள் கிறங்கினார்கள். பூரிப்பானார்கள். அக்கணமே, ‘‘எத்தடை வரினும், இப்பணி முடிக்க, அரசருக்கு துணை நிற்போம்’’ என உறுதிபூண்டார்கள். எல்லோரும் எழுந்துநின்று, அதை வாக்காகத் தந்தார்கள்.

மன்னர் உற்சாகமாகி, கோபுரத்திருப்பணிக்கு குழப்பமின்றி தயாரானார். ஏதோ ஞாபகம் வந்தவராக இளையராணியின் பக்கம் திரும்பி, ‘‘ஆமாம், அன்று நீ தலைமை ஸ்தபதியை தனியே அழைத்துப்போய் பேசினாயே, என்ன பேசினாய்?’’ என கேட்டார். இளையராணி தயங்கியபடி, ‘‘அது வந்து’’ என இழுக்க, ‘‘பரவாயில்லை, சொல்’’ என்றார். இளையராணி ‘‘என் ஆசைக்கு, கிழக்கு கோபுரத்தின் நுழைவாயிலின் இடப்பக்கம், வடக்குப் பார்த்தபடி, கைகள் கூப்பிய நிலையில், இரண்டரையடி உயரத்தில், உங்கள் உருவச்சிலையை நிர்மாணிக்க சொல்லியிருந்தேன்’’ என தயங்கியபடி பதில் சொன்னார்.

சட்டென கழுத்தை பின் வாங்கி, இளையராணியை முறைத்த மன்னர், ‘‘ஏன், கம்பீரமாக நிற்கப்போகும் கோபுரங்களுக்கு கண்படும் என்பதற்காக, திருஷ்டி பொம்மைபோல, இப்படி தொப்பைவயிறோடு நிற்கும் என்சிலையை வைக்கச் சொன்னாயா?’’ என்றார். போலியாய் முறைத்த மன்னரின் கோபத்திற்கு, ‘‘இல்லையில்லை அப்படியில்லை’’ என வேகமாக மறுத்த இளையராணியை, ஓடிப்போய் தோளோடு அணைத்துக் கொண்டார்.

அந்த நாடகத்திற்கு, மூத்தராணி உட்பட, எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். அந்த சந்தோசத்தோடு மன்னர் வீரவல்லாளன், மாதப்பதண்டநாயக்கருக்கு எல்லைப் பாதுகாப்பு விஷயமாக, சில கட்டளைகளிட்டார். எதற்கும் படைபலத்தைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார். ஸ்தபதிகளுக்கு, மேலும் சில வசதிகள் செய்து தரும்படி, அமைச்சர்களுக்கு கட்டளையிட்டார். கிராமத்துவரியை கூட்டலாமாவென கேள்வியெழுப்பினார். செங்கற்களும், பாறைகளும் தடைபடாது, கிடைக்க ஆவண செய்யவேண்டுமென வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இனத்தாரும் செய்ய வேண்டிய பொறுப்புக்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென்றார்.உச்சிப் பொழுதில் நாலாதிசைக்கும் உத்தரவுகள் பறந்தன. வெடி மருந்துத்திரியில், தீப்பிடித்ததுபோல, வேலைப் பரபரப்பு கூடியது. தலைமை ஸ்தபதியும், மன்னர் வீரவல்லாளனும், ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து கோபுரப்பணியை தீவிரப்படுத்திய அந்த கணத்தின் முதல் நற்சகுனமாக, கட்டுமானப்பணிக்கான இடத்தில், இரண்டங்குல உயரத்தில், கண்கவரும் விதமாக, பச்சைப்பசேலென அழகாக, தூவியிருந்த விதைகளெல்லாம் முளைத்திருந்தன.

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Tags : King ,Veeravalalla ,Rajakopura ,
× RELATED வரலாற்று நோக்கில் அண்ணாமலை ராஜகோபுரம்