×

பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 50% இடங்களை நேரடியாகவும் 48%இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், 2% இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மூலமும் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணையின்படி 2% ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பரணி, உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், கடந்த 2014-15ம் ஆண்டு முதல் 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு நீண்டகாலமாக பதவி உயர்வு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறிய நீதிபதி, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

The post பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Tamil Nadu Department of School Education ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு