×

ராசிபுரம் அருகே பரபரப்பு இரும்பு ராடால் அடித்து தொழிலாளி படுகொலை

*முன்விரோதத்தில் வாலிபர் வெறிச்செயல்

நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் மேற்பரப்பில் கூலிங் அட்டை அமைப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, திண்டுக்கல்லை சேர்ந்த 4 வாலிபர்கள் வேலைக்கு வந்தனர். வேலைக்கு வந்த மோகன்ராஜ்(27) என்பவர், நேற்று காலை இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன், உடனடியாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மோகன்ராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திண்டுக்கல்லில் இருந்து விஜய்(27) என்பவர், மோகன்ராஜூடன் வேலைக்கு வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக தொழிலாளிகள் அவர்களை சமாதானம் செய்து, தூங்க அனுப்பி வைத்தனர்.

அப்போது, திடீரென ஆத்திரமடைந்த விஜய், மோகன்ராஜை அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கீழே விழுந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வேலைக்கு வந்த இடத்தில் முன்விரோத தகராறில் சக தொழிலாளியை, வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மோகன்ராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

The post ராசிபுரம் அருகே பரபரப்பு இரும்பு ராடால் அடித்து தொழிலாளி படுகொலை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Purushottaman ,Goundampalayam ,Namakkal district ,Dindigul ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்