×
Saravana Stores

உயரமான வாழ்விற்கு ஆழமான அஸ்திவாரம் தேவை

ஒரு மனிதன், தன் வீட்டருகே சிலர் குழி தோண்டுவதை பார்த்து அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என விசாரித்தான். அவர்கள் தாங்கள் கட்டிட வேலை ஆரம்பிப்பதாக சொன்னார்கள். மூன்று மாதம் கழித்து மீண்டும் சென்று பார்த்தான், அவர்கள் தொடர்ந்து அங்கு பெரிய பள்ளம் தோண்டி கொண்டு இருந்தார்கள். ஆறுமாதம் கழித்து மீண்டும் அதை சென்று பார்வையிட்டான். மீண்டும் அங்கு பள்ளம் தோண்டுவதை பார்த்த அவன், மிக கோபமடைந்து, ‘‘இங்கு என்னதான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டான்.

வேலை செய்கிறவர்கள், ‘‘இதன் ஆழத்தை பார்’’ என்றார்கள். அவன் ‘‘இதன் ஆழத்தை பார்க்க முடியவில்லையே’’ என பதிலளித்தான். ஆழப்படுத்தியவர்கள் இவனிடம் ‘‘இன்னும் 6 வருடங்கள் கழித்து வா, உன்னால் இங்கு கட்டவிருக்கும் கட்டிடத்தின் உயரத்தை பார்க்க முடியாது’’ என்றார்கள். இறைமக்களே, ஆழமான மற்றும் உறுதியான அஸ்திவாரத்தை பொருத்தே கட்டிடத்தின் உயரமும் அகலமும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆழத்தினை காணாமல் உயர்வினை காணவியலாது.

ஆழத்திற்குள் செல்லாத எவரும் பவள முத்துக்களை சொந்தமாக்கிக்கொள்ள இயலாது. இக்காலத்தில் சிலர் உடனடியாக உச்சத்தை தொட்டுவிட முயற்சிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. குறுக்குவழியில் கிடைக்கும் எவ்வித நன்மைகளும் உயர்வுகளும் வாழ்வில் நிரந்தரமானதாக நிலைத்து நிற்காது என்பதை ஒவ்வொரு மனசாட்சியும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆழத்தை காணாத விதை ஆலமரமாக வளராது. தேவன் ஒரு நன்மையை நம்மிடம் கொடுப்பதற்கு முன் நம்மை அந்த நன்மையை கையாள்வதற்கென ஆயத்தப்படுத்துகிறார் அல்லது பழக்கப்படுத்துகிறார்.

குயவனின் கையில் அடங்கியிராத களிமண் பாண்டமாவதில்லை. ஆகவே, கடவுள் உங்களை உயர்த்தும் வரை ஆழமானாலும், இருளானாலும் தேவனின் கரங்களில் களிமண்ணைப்போன்று அடங்கியிருங்கள். ஏற்றகாலம் வரும்போது பக்குவமடைந்த உங்களை உயரங்களில் பறக்கச் செய்வார்.‘‘ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (1 பேதுரு 5:6) என இறைவேதம் வாழ்வின் உன்னதம் பற்றி எடுத்துரைக்கிறது.

– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.

The post உயரமான வாழ்விற்கு ஆழமான அஸ்திவாரம் தேவை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி