திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள்
கிரகங்களே தெய்வங்களாக அருள் செய்கின்றன. வெவ்வேறு கிரகங்கள் இணையும் பொழுது ஏற்படுகின்ற மாற்றத்தால் பல்வேறு தேவதைகளும் அவ்விடத்தில் அருள்பாலிக்கின்றன என்பதே உண்மை. அவ்வாறே, இக்கோயிலின் ஸ்தல புராணம் என்னவெனில், புண்டரீக மகிரிஷி திருமாலை மட்டுமே வழிபடும் நெறியை பின்பற்றுபவர். ஒருமுறை காஞ்சிபுரம் வந்து அனைத்து ஸ்தலங்களையும் வழிபட்டார். அன்றொருநாள் ஏகாதசி அன்று திருப்பாற்கடல் வந்தார். வெளியில் நந்தி இருக்கவே இது சிவ ஸ்தலம் என திரும்பிவிட்டார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் இது பெருமாள் காட்சி ஸ்தலம் என அழைத்துச் சென்றார்.
ஏகாதசி என்பதால் தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு அக்கோவிலுக்குள் சென்றார். தனது கரங்களால் மூலவரை தடவிப் பார்த்த பொழுது சங்கு சக்கரம் இருப்பதை உணர்ந்து தன் கண்களில் உள்ள கட்டை அவிழ்த்து பார்த்தார். என்ன ஆச்சர்யம், சிவனின் ஆவுடையார் மீது பிரசன்ன வெங்கடேச பெருமாளாக காட்சிக் கொடுத்தார். புண்டரீக மகிரிஷிக்கு சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று அவரின் அகக் கண்ணைத் திறந்தார்.இத்தலம் சைவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒன்று என விளக்கும் திருத்தலம். இத்தலம் 108 திவ்ய தேசத்தில் 106 திவ்ய தேசம் மட்டுமே பூமியில் உள்ளது.
மற்ற இரண்டு திவ்ய தேசங்களும் பரமபதம் இவை பூமிக்கு வெளியில் உள்ளது. பக்தர்கள் அனைத்து திவ்ய தேசத்தை தரிசிக்கவே ரெங்கநாதராகவும் சயனக் கோலத்தில் காட்சியிளிக்கிறார்.இத்திருத்தலம் சூரியன், புதன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஆகிய கிரக இணைவுகளால் இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.ஸ்தீரி தோஷம் / களத்திர தோஷம் ஸ்தீரி தோஷம் என்பது 7ம் அதிபதி 7ல் தனித்து இருந்தாலும் 7ம் அதிபதி 8ல் நீசம் பெற்றாலும் புதன் சந்திரனுடன் ஸ்தீரி தோஷமாக ஏற்படும்.7ம் அதிபதி 7ம் பாவகத்தில் காரகோ பாவ நாஸ்தி தோஷமும் ஏற்படுகின்றது.
மேஷ ராசிக்கு 7ம் அதிபதி 7ல் இருப்பதால் தோஷம் ஏற்படுகின்றது. இந்த ஸ்தீரி தோஷமும் காரகோ பாவ நாஸ்தி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு தேனும் தினை மாவையும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.மேஷ லக்னக்காரர்கள் தனஸ்தானம் பலம் பெறுவதற்கு ஏகாதசி அன்று ஏழு ேசாழியும் பச்சைப்பயிறும் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வந்தால் தனஸ்தானம் பலம் பெறும்.
சூரியன் உச்சம் பெற்றாலும், சனி உச்சம் பெற்றாலும் இத்தலத்திற்குச் சென்று நல்லெண்ணெ்ய் அபிஷேகம் செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும். மேஷ ராசியிலும் துலாம் ராசியிலும் சூரியன், புதன், சனி இணைவு உள்ளவர்கள் ஒரு புல்லாங் குழல் வைத்து வழிபட்டால் நரம்பு தொடர்பான பிரச்னைகளும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டாகும். எப்படிச் செல்வது? சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாற்கடல், காவேரிப் பாக்கத்தில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து 99 கிலோ மீட்டர், வேலூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஜோதிடர்: திருநாவுக்கரசு
The post கிரகங்களே தெய்வங்களாக appeared first on Dinakaran.