×

தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

 

புதுச்சேரி, அக். 7: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, சிவப்பு அட்டைக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்பிரச்னையில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஒரு கிலோ அரிசிக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வருகிறது.

வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், அரசு வழங்கும் மானிய உதவி போதவில்லை. எனவே, பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ரங்கசாமி சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனையேற்று புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகளை திறக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

மேலும், அரிசி விவகாரத்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதனால் தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடையை திறந்து அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமியும் தெரிவித்திருந்தார். அதே சமயம், தீபாவளி பண்டிகைக்குள் ரேஷன் கடையை திறக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த ரேஷன் கடைகள் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும். தீபாவளியையொட்டி நியாய விலை கடை மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மாத சம்பளம் அளிக்கப்படும். தொடர்ந்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. ரேஷன் பொருட்களை வீடு, வீடாக சென்று மக்களுக்கு வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம், இதுகுறித்து பிரதமர் மோடியை நேரில் சந்திக்க எண்ணமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* நடிகர் விஜய்க்கு வாழ்த்து
நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளது குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெறவும், நடிகர் விஜய் அரசியலில் மேலும் வளர்ச்சி அடையவும் வாழ்த்துகள். விக்கிரவாண்டியில் நடக்கவுள்ள மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால், கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும், என்றார். தொடர்ந்து, முதல்வரிடம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, அதை தேர்தல் நேரத்தில் பார்க்கலாம், என்றார்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Diwali festival ,
× RELATED இயற்கை 360°