×
Saravana Stores

சிப்காட்டில் செயல்பட்டு வரும் குப்பை தொழிற்சாலையால் வாழத்தகுதியற்ற இடமாக மாறிவரும் கும்மிடிப்பூண்டி:  ரசாயனம் கலந்த நிலத்தடி நீர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, அக். 5: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டுவரும் குப்பைத் தொழிற்சாலை காரணமாக வாழத்தகுதியற்ற இடமாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் என்பது 1982ம் ஆண்டு வரை ஒரு விவசாயப் பகுதியாகும். இதில் அதிக அளவில் கிழங்கு, காய்கறிகள், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை காலத்துக்கு ஏற்றார் போல் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அறுவடை செய்யும் பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றுக்கொண்டு அப்போது சென்னைக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்வார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 1982ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் நிறுவனம் கையகப்படுத்த தொடங்கியது. அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அரசு நிர்ணயித்த தொகையை வழங்க தொடங்கியது. அப்போது சில விவசாயிகள் நிலம் தர மறுத்துள்ளனர். அதையும் மீறி அரசு நீதிமன்றங்களை அணுகி நிலங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு முதல் முதலில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் கனிசாய் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொன்றாக நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் இரும்பு உருக்கு அலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் அமையப்பெற்றது.

இதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சில அமைப்புகள் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் வரக்கூடாது என பல போராட்டங்கள் முன்வைக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டாபர் டூபான் கம்பெனி. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அந்த தொழிற்சாலை உற்பத்தி திறனை மாற்றி அங்கு அமைக்கப்பட்டது. ஆனாலும் கூட கார்பன் வெளியிடும் பல தொழிற்சாலைகள் செயல்பட்டன. அப்போதிலிருந்து சுற்று வட்டார பகுதிகளில் மெல்ல உடலில் பல்வேறு நோய்கள் உண்டாக தொடங்கின. அதில் பெரும் அளவில் காற்றில் பரவும் கருப்பு துகள்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கின.

இந்நிலையில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதும், இதனால் மக்கள் நோய்வாய்ப்படுவதும் மேலும் மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகியதும் அதிகரித்து வந்தது. ஆனாலும் கூட தொழில் நிறுவனங்கள் பல மாவட்டங்களில் இருந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கிறேன் அரசுக்கு தெரியப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, இரும்பு உருக்காலைகள், மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மரம் அறுக்கும் தொழிற்சாலை, எண்ணெய் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு விதமான நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் ஏற்கனவே நச்சுப் புகையை வெளியிட்டு சித்ராஜ் கண்டிகை, கோபால் ரெட்டி கண்டிகை, சிந்தலகுப்பம், சிறுபுழல்பேட்டை, புதுப்பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூர், சாமிரெட்டி கண்டிகை, நாகராஜ் கண்டிகை, காய்லர்மேடு, சின்ன ஒபுளாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சிமிலி வழியாக செல்லும் கரும்பு புகைகள் ஆங்காங்கே படிந்து பொதுமக்களுக்கு பலவித நோய்களை உண்டாக்கி வருகிறது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே பலமுறை துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும்.

இந்த நிலையில் சிப்காட் தொழில் பேட்டையில் மனிதனை அழிக்கக்கூடிய ரசாயன குப்பை கிடங்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்த தொழிற்சாலை வருவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கண்ட குப்பை கிடங்கு தொழிற்சாலை இந்த பகுதியில் நிறுவக்கூடாது என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய அரசுடன் கைகோர்த்துக்கொண்டு தொழிற்சாலை நிறுவப்பட்டது.

இந்த தொழிற்சாலைக்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆந்திரா, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெமிக்கல் கழிவுகள், மருத்துவ கழிவுகள், 100 வருடங்கள் அழியாத கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தினந்தோறும் 25 லாரிகள் மூலம் குவியல் குவியலாக கொட்டி வைக்கின்றனர். இந்த குப்பை மக்கி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமப்புற மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது. இது சம்பந்தமாக திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது நாள் வரை இந்த தொழிற்சாலை சுமார் 500 அடி உயரத்திற்கு மேல் குப்பைகளை போட்டு அதனை மூடி வைக்கின்றனர்.

இதனால் ரசாயன கழிவுகள் அதிலிருந்து வெளியேறி நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வெயில் காலங்களில் ஆழ்துழை கிணறுகளில் இருந்து ரசாயன தண்ணீர் வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து செயல்பட்டால் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர் முழுவதும் ரசாயன மயமாகி கும்மிடிப்பூண்டி வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் என விவசாயிகளும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்து இந்த தொழிற்சாலையில் மக்கள் இல்லாத இடத்தில் தொழிற்சாலை நிறுவ வேண்டும் எனவும் உடனடியாக இதனை மூட வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த தொழிற்சாலைக்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆந்திரா, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெமிக்கல் கழிவுகள், மருத்துவ கழிவுகள், 100 வருடங்கள் அழியாத கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தினந்தோறும் 25 லாரிகள் மூலம் குவியல் குவியலாக கொட்டி வைக்கின்றனர்.

The post சிப்காட்டில் செயல்பட்டு வரும் குப்பை தொழிற்சாலையால் வாழத்தகுதியற்ற இடமாக மாறிவரும் கும்மிடிப்பூண்டி:  ரசாயனம் கலந்த நிலத்தடி நீர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Chipgat ,Kummidipoondi ,Chipkot ,Dinakaran ,
× RELATED நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி...