×

பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம்… யார் இந்த நெதன்யாகு? உலகையே அதிர வைத்த இஸ்ரேல் பிரதமர்

இவர் நல்லவரா? கெட்டவரா? என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பற்றி உலக மக்களிடம் இன்று கேட்டால் அவர் கெட்டவர் என்று தான் பெரும்பாலானவர்கள் பதில் சொல்லுவார்கள். பாலஸ்தீனர்களை கேட்டால் கொலைகாரன் என்று சாடுவார்கள். காசா மீது மனிதாபிமானமற்ற கொலைவெறி தாக்குதல், அத்தோடு ஏமன், லெபனான் இப்போது ஈரான் என்று அண்டைநாடுகளுடன் சண்டை. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை. ஈரானுடனான மோதல் இன்று மூன்றாம் உலகப்போராகவே மாறும் சூழல்.

இப்படிப்பட்ட நிலையில் பிபி என்று தன் நாட்டு மக்களால் அழைக்கப்படும் நெதன்யாகுவை யூதர்களை தவிர வேறு யாருக்குதான் பிடிக்கும். ஆனால், நெதன்யாகுவை பொறுத்தவரை, அவர் தேர்ந்த அரசியல்வாதி, எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி தன்னை வளர்த்துக் கொள்வதில் வல்லவர். இன்று உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளில் அடிபடும் பெஞ்சமின் நெதன்யாகு யார் தெரியுமா? அவர் யாருக்கும் அடங்காதவர் என்று பெயர் எடுத்தவர்.

வாழ்க்கையில் எத்தனை தாழ்வுகளை பார்த்தாலும், அதை தன் ஏற்றத்துக்கான படிக்கட்டாக மாற்றிக்காட்டக் கூடியவர். 1949ல் ஜெருசலேத்தில் யூதர் குடும்பத்தில் பிறந்தார். பள்ளி படிப்பு அமெரிக்காவில்தான். அது முடிந்ததும் 1967ல் இஸ்ரேல் திரும்பியவர் சில காலம் ராணுவத்தில் பணிபுரிந்தார். 1972ல் மீண்டும் அமெரிக்கா திரும்பி கல்லூரி படிப்பை தொடர்ந்து ஆர்கிடெக்ட் ஆனார். சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தபிறகு அங்கிருந்து 1978ல் மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பினார்.

அன்று முதல் இன்றுவரை தன்னை முன்னிறுத்திக்கொண்டு முன்னேறுவதையே குறிக்கோளாக கொண்டவர்தான் இந்த நெதன்யாகு. இஸ்ரேல் அரசுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்ட நெதன்யாகு அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துணை தூதர் பொறுப்புக்கு வர அவருக்கு ஆனது 4 ஆண்டுகாலம்தான். 1984ல் ஐநாவுக்கான இஸ்ரேலிய தூதர் பொறுப்பு கிடைத்தது. 1988 தேர்தலுக்கு முன் இஸ்ரேல் திரும்பியவர் லிகுட் கட்சியில் சேர்ந்தார். தேர்தலுக்கு பிறகு பிரதமர் இட்ஷாக் ஷமீர் ஆட்சியில் தனது செல்வாக்கால் வெளியுறவுத் துறை இணை அமைச்சரானார்.

இதுதான் அரசியலில் அவரது தொடக்கப்புள்ளி. இன்றைக்கு நெதன்யாகு, இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனை படைத்து விட்டார். கட்சியில் சேர்ந்த 5வது வருடம் 1993 பிப்ரவரியில் லிகுட் கட்சியின் தலைவர் பதவியை பிடித்துவிட்டார். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பும் சேர்ந்தே வந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் இட்சாக் ரபின். பிரதமர் பதவி தான் நெதன்யாகுவுக்கு குறி. இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், பாலஸ்தீன விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் இறங்க, அது நெதன்யாகுவின் எழுச்சிக்கு காரணமாக அமையும் என்பதை யாருமே கணிக்கவில்லை.

விரும்பாத இஸ்ரேலையும், ஆவலோடு எதிர்பார்த்திருந்த பாலஸ்தீனத்தையும் அமைதி ஒப்பந்தத்தில் வலுகட்டாயமாக கையெழுத்திட வைத்தார் கிளிண்டன். இட்சாக் ரபின், யாசர் அராபத் இடையேயான இந்த ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. பாலஸ்தீனர்களுக்கு அதிகாரமா? என்ற கேள்வி இஸ்ரேலில் உள்ள யூதர்கள் மனதில் எழ போராட்டம் வெடித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நெதன்யாகு, இதுதான்டா எனக்கான வாய்ப்பு என்று களத்தில் குதித்தார். யூதர்களை காக்க வந்த தேவ தூதனாக தன்னை காண்பித்துக் கொண்டார். யூதர்களை வெறியேற்றினார்.

அதே காலகட்டத்தில் காசாவில் பாலஸ்தீன குழுவான ஹமாஸ், இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியது. அத்தோடு இஸ்ரேலில் தற்கொலைப்படை தாக்குதல்களையும் நடத்த, அதில் ஏற்பட்ட உயிர் பலிகளை தன்னை வளர்த்துக்கொள்ள சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார் நெதன்யாகு. விளைவு இஸ்ரேலில் அவரது செல்வாக்கு உயரத் துவங்கியது. பிரதமர் ரபினுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டார். விளைவு, 1995ல் ரபின் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு காரணம் நெதன்யாகுதான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ரபின் மனைவி.

இஸ்ரேல் மக்களும் இதை ஏற்று, நெதன்யாகுவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். நெதன்யாகு செல்வாக்கு சரிய துவங்கியது.  இதற்கிடையே 1996ல் இஸ்ரேல் பிரதமர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. களத்தில் குதித்தார் நெதன்யாகு. ஆனால், மக்களிடையே கடும் எதிர்ப்பு காரணமாக நெதன்யாகு தோற்பது உறுதி என்று கணிப்புகள் வெளியானது. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், அடுத்தடுத்து ஹமாஸ் தற்கொலை படை தாக்குதல் நடத்த நிலைமை மாறியது.

தீவிரவாதத்தை வேரறுத்தால் மட்டுமே இஸ்ரேல் பாதுகாக்கப்படும் என நெதன்யாகு பேசி வந்ததன் மூலம் மீண்டும் இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதன் மூலம் தன் மீதான ரத்தக்கறையை துடைத்தெறிந்த அவர், இஸ்ரேல் மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமர் ஆனார். ஆனால் அடுத்த 3 ஆண்டுகள் பிரதமராக நெதன்யாகுவால் இஸ்ரேல் மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அதே அராபத்துடன் கை குலுக்க வேண்டியதானது. பாலஸ்தீனத்துடனான அமைதி ஒப்பந்தத்தை இழுத்தடித்தாலும் அதை முற்றாக முறியடிக்க நெதன்யாகுவால் முடியவில்லை.

இதனால் 1999ல் நடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அரசியல் வாழ்க்கையிலிருந்தே விலகுவதாக அறிவித்தார். அதன்பின் 7 ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்த சமயத்தில் ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான அமைதி முயற்சிகள் குளறுபடியாகத் தொடங்கின. மீண்டும் இஸ்ரேலில் குண்டுகள் வெடிக்க, நெதன்யாகு அரசியலுக்கு திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.

பிரதமர் ஏரியல் சொரோன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் நெதன்யாகு. அப்போது காசா முனையில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வாபஸ் பெற பிரதமர் சொரோன் சம்மதித்தார். இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்பட்டு காசா தனி நாடாக தேர்தல் நடத்தி அரசாங்கத்தை தேர்வு செய்ய அமெரிக்கா வழிவகுத்தது. காசா தனி நாடானால் அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என வன்மையாக எதிர்த்த நெதன்யாகு, நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கூறியபடியே, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆயுதம் ஏந்திய அமைப்பான ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று காசாவில் ஆட்சியை பிடித்தது.

அதுவரையிலும் தீவிரவாத அமைப்பாக ஹமாசை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வந்த நிலையில், அந்த அமைப்பு அரசாங்கமானது. இதை அமெரிக்கா உட்பட எந்த நாடும் விரும்பவில்லை. ஹமாசை அங்கீகரிக்க தயாராகவும் இல்லை. இதன் பிறகே காசாவை சுற்றி பாதுகாப்பு வளையத்தை அமைத்தது இஸ்ரேல். ஹமாசும் பாலஸ்தீன மக்களும் காசா எனும் சிறையில் அடைக்கப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்து ஆடியது. காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.

அங்கிருந்து யாரும் தங்கள் எல்லையில் வருவதை இஸ்ரேல் விரும்பவில்லை. இதன் காரணமாக ஹமாஸ், இஸ்ரேல் இடையேயான ஏவுகணை தாக்குதல்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கின. சில அரபு நாடுகள் ஹமாசுக்கு ஆயுத உதவி, பண உதவி செய்தன. இதன் மூலம் சுரங்கங்கள் அமைத்து தனது கோட்டையை பலப்படுத்தியது ஹமாஸ். இதற்கிடையே, ஹமாசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றதன் மூலம் பத்து ஆண்டுகள் கழித்து 2009ல் மீண்டும் பிரதமராக ஆட்சியை பிடித்தார் நெதன்யாகு.

அதன் பிறகு அந்த பதவியில் இருந்து நெதன்யாகுவை வெளியேற்ற முடியவில்லை. 2022ல் நடந்த தேர்தலோடு தொடர்ந்து 6 முறை பிரதமராக வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2022ல் வலது சாரிகள் ஆதரவுடன் பிரதமர் ஆனார். நெதன்யாகு மீது அடுக்கடுக்காக ஊழல், லஞ்ச புகார்கள் எழ, அதை முறியடிக்க நீதித்துறையின் அதிகாரங்களை முடக்க முயன்றார் நெதன்யாகு. விளைவு இஸ்ரேல் மக்கள் கொதித்தெழுந்தனர். நெதன்யாகுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில்தான், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலை முன்கூட்டியே அறியத் தவறியது இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் அமைப்பின் மிகப்பெரிய தோல்வி மட்டுமல்ல, நெதன்யாகுவுக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வியும் கூட. இந்த முறையும் துவளாத நெதன்யாகு, அமெரிக்காவின் ஆதரவுடன், காசாவை கந்தலாக்கி, ஹமாசை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச் செய்துள்ளார்.

அதோடு நிற்காமல் லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி, ஈரான் என ஒட்டுமொத்த எதிரிகளையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்ற 74 வயது நெதன்யாகுவின் இந்த முரட்டு துணிச்சலால், இன்றைக்கு மூன்றாம் உலகப் போரில் முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போய் உள்ளன உலக நாடுகள்.

* இஸ்ரேலின் பாதுகாவலராக என்னை வரலாறு நினைவு கூர வேண்டும். இந்த பிறப்பில் இது போதும், எனக்கு…- பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேல் பிரதமர்.

* டிரம்ப் ஆதரவால் ஜெருசலேமை மீட்டார்
2017ல் அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளித்தார். டிரம்பின் தந்தை ஃபிரெட் டிரம்ப்புடன் கடந்த 1980களிலேயே நட்புடன் இருந்தவர் நெதன்யாகு. அந்த நட்பு, அவரது மகன் டொனால்ட் டிரம்புடனும் தொடர்ந்தது. டிரம்ப் மூலமாக இஸ்ரேல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான லட்சியமான ஜெருசலேமை முழுமையாக மீட்டெடுத்தார் நெதன்யாகு.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தார். அதோடு, அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும் டிரம்ப் உதவினார். இதன் மூலம் அமெரிக்கா, அரபு நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் பெற்றது. இதன் காரணமாகத்தான் ஈரானுக்கு கூட அரபு நாடுகள் ஆதரிக்காமல் உள்ளன.

* ஒபாமாவுக்கே பாடம் எடுத்தார்
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்ற போது அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். 1967ல் போருக்கு முன்பாக இருந்த எல்லையை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும், அதன்பிறகு கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டமைப்புகளை இடிக்க வேண்டும் என ஒபாமா வெள்ளைமாளிகையில் பேட்டி அளித்தார். அடுத்த நாளே அமெரிக்கா சென்ற நெததன்யாகு வெள்ளைமாளிகையில் ஒபாமாவை சந்தித்து யூதர்கள் குறித்தும் இஸ்ரேல் குறித்தும் விளக்கம் அளித்தார்.

அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையிலேயே வைத்து பாடம் எடுக்கும் தைரியம் எந்த நாட்டின் தலைவருக்கு வரும்? அதோடு தனது நாட்டின் ஒரு செமீ இடத்தை கூட திருப்பி தர முடியாது என நெதன்யாகு திட்டவட்டமாக கூறினார். இதற்கு சம்மதிக்காவிட்டால் அமெரிக்காவின் நிதி உதவி கிடைக்காது என ஒபாமா மிரட்டியும் நெதன்யாகு பணியவில்லை. தனது பிற கூட்டாளிகள் மூலம் இஸ்ரேலை பாதுகாப்பேன் என அமெரிக்காவை எதிர்த்து நின்றார்.

The post பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம்… யார் இந்த நெதன்யாகு? உலகையே அதிர வைத்த இஸ்ரேல் பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Netanyahu ,Prime Minister of Israel ,Benjamin Netanyahu ,Palestinians ,Gaza ,Prime Minister of ,Israel ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...