போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை இடைக்கால குற்றப்பத்திரிகை வரும் 15ம் தேதி தாக்கல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சி.வி.பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சிவராமன் மரணம் குறித்து சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிக்கை அளித்த பின்னர் விசாரணை நடத்தப்படும். சிவராமன் தந்தை மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அரசு தரப்பில், 4 பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அக்டோபர் 15ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து நீதிமன்றத்திற்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட பின்னரே முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று கூறி விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என்று அரசு சார்பில் கோரப்பட்டது. அதற்கு, இதுகுறித்து அடுத்த விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை இடைக்கால குற்றப்பத்திரிகை வரும் 15ம் தேதி தாக்கல்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: