சென்னை அண்ணா பல்கலையில் இயங்கும் நிலஅளவை பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் நவீன பயிற்சி கூடம், ஆய்வுக்கூடம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் நிலஅளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் 2 இடங்களில் நிலஅளவை பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பயிற்சிக் கூடம் உள்ளது. மற்றொன்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இப்பயிற்சி நிலையத்தில் 50 நபர்களுக்கு பயிற்சி வழங்க கூடிய வசதிகள் உள்ளன. இந்த பயிற்சி நிலையம், 2005ம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒப்பளிக்கப்பட்ட தொகையான ரூ.250 லட்சம் நிதியைக் கொண்டு தொடங்கப்பட்டன.

தேசிய நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.147.24 லட்சம் நிதி 2023ம் ஆண்டில் இப்பயிற்சி மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் சுமார் 50 நபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்த வகுப்பறை மற்றும் இதர உட்கட்டமைப்புகளை தற்போது, மேலும் 50 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.90.00 லட்சம் செலவில் நவீன நிலஅளவை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.45 லட்சம் செலவில் 3600 சதுர அடி பரப்பில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, பயிற்சி வகுப்பறை, சிறிய கூட்ட அரங்கம், ஆய்வுக்கூடம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அமுதா, நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, அண்ணா பல்கலைகழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.வித்யா மற்றும் இணை இயக்குநர் மு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை அண்ணா பல்கலையில் இயங்கும் நிலஅளவை பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் நவீன பயிற்சி கூடம், ஆய்வுக்கூடம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: