×
Saravana Stores

தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் 2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு: 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவ குழு

தேன்கனிக்கோட்டை, செப் 30: தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில், 2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 24 மணி நேரமும் மருத்துவகுழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 2வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட கலெக்டர் சரயு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது: தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம், (28.9.2024) தீ விபத்து ஏற்பட்டது. முதலமைச்சர் உத்தரவின்படி, எலக்ட்ரானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் தீயணைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டோம். மேலும் நிறுவனத்தில் 2வது நாளாக தீயணைப்பு பணிகள் நடைபெற்று தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் 27.9.2024 அன்று இரவு பணியில் இருந்த 523 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூச்சு திணறல் ஏற்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 நபர்களில் 9 பேர் சாதாரண வார்டில் உள்ளனர். 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் நல்ல முன்னேற்றத்துடன் உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர் மற்றும் ஒசூரில் இயங்கி வரும் பெரு நிறுவனங்களின் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் சேதாரம் குறித்து விபரங்கள் பின்னர் தெரிய வரும்.

சுகாதாரத்துறை சார்பில் 2 ஆம்புலன்ஸ், ஆலை நிறுவனம் சார்பில் 1 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபடும் நபர்களுக்களுக்கு மயக்கம், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உபகரணங்களுடன் 3 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைங்களில் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அவசர கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04343- 234444 அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பணியாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உதவி வழங்கப்படும். இவ்வாறு மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) ஞானமீனாட்சி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ரமேஷ்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, ஓசூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் பிரபாகர், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் முனிராஜ், மற்றும் காவல் துறை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் 2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு: 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவ குழு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District ,Thenkanikotte Circle ,Udaithurkam Oratchi ,Thimjapalli ,Dinakaran ,
× RELATED சபரிமலை செல்ல மாலை போடும் முன்பு...