×

17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள்

*ஊத்தங்கரை அருகே கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே, திருவண்ணாமலை மலை ஜோதி குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர், புதிய கல்வெட்டு உள்ளதாக கொடுத்த தகவலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி இருசங்குகுட்டை என்ற இடத்தில், பெரியபாறையின் மேற்பகுதியில், மூன்று இடங்களில் கல்வெட்டு மற்றும் குறியீடுகள் இருப்பதை கண்டு, அதை படியெடுத்தனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதன் முறையாக கல்வெட்டுகளில் உள்ள குறியீடுகளில், திருவண்ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது. இது திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றப்படுவதை குறிக்கிறது. இதனுடன் கோபுரம், சூரியன், சந்திரன், வாள் போன்ற குறியீடுகளும் காணப்படுகிறது.

முதல் கல்வெட்டில், மகதை மண்டலத்தை சேர்ந்த ஏமாடு பனையதம்பாள் மற்றும் பெரிய செல்வி இருவரும், மணல் மற்றும் பூமி இருக்கும் வரை இருப்பார்கள் எனவும், அவர்களின் நினைவாக இலக்கியன் என்பவர் குறித்துள்ளார்.

கல்வெட்டின் இறுதியில் இப்படிக்கு இலக்கியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கல்வெட்டில், அண்ணாமலை என்ற திருவண்ணாமலை என்பவரின் வயது 77 என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் கல்வெட்டில் வன்நெஞ்சப்பெரும் சானார் என்ற வீரரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று கல்வெட்டுகளும், 17ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை. இந்த ஊர் பழங்கால பெருவழியில் அமைந்திருக்க வேண்டும். தொலை தூரத்தில் இருந்து, இவ்வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள் இக்கல்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு உள்ளிட்ட சில கல்வெட்டுகளிலும், திருவண்ணாமலையின் முக்கோணகுறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி, செந்தில், வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள் appeared first on Dinakaran.

Tags : Oathankara Krishnagiri ,Othangara ,Tiruvannamalai ,Krishnagiri district ,Venkadesan ,Sendil ,Krishnagiri District Government Museum ,
× RELATED ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க...