அதிராம்பட்டினம் செப்.29: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் இத்ரீஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் பாதுர்ஷா, மாநில பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் பங்கேற்று கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விளக்கினர்.
இக்கூட்டத்தில் கோவை செய்யது பேசுகையில், முஸ்லிம்களின் வக்பு நிலங்கள் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. அதை மீட்டெடுத்து அவற்றின் விபரத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது கடுமையாக மக்களை பாதிக்கிறது. அந்த மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். அடிப்படை வசதிகளான சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி இதை அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு அளிப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து அதிராம்பட்டினத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
The post அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.