×
Saravana Stores

இதயம் காப்போம்: உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை

* சிறப்பு செய்தி
இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வருகின்றோம். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு தேவையான எந்த ஒரு நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. நூற்றில் ஒரு சிலர் மட்டுமே அவர்களது உடல்நிலை குறித்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். மீதமுள்ளவர்கள் அலட்சியமாகவே இருந்து வருவதால் உடல்நலம் சார்ந்த பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு சிறு வயதிலேயே உயிரிழக்கும் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஒன்றுதான் முக்கிய காரணமாக உள்ளது.

இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், 29ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக இதய கூட்டமைப்பு, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உலக இதய தினத்தை கடந்த 1999ம் ஆண்டு அறிவித்தது. இந்த யோசனை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவரான அன்டோனி பை டி லூனா என்பவரால் உருவானது. இதன் மூலம் இதய நோய் மற்றும் இதய நோய்களை நிர்வகிப்பதற்கான அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வுகள் முக்கியமாக இதய நோயின் அறிகுறி மற்றும் அறிகுறிகளைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் சிக்கல்களை தவிர்க்கவும், இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க மக்களுக்கு உதவுகிறது. இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று. அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இதய ஆரோக்கியம் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இதய நோய்கள் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு புரிந்துகொள்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலக இதய தினம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக பங்கேற்க மற்ற அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டுக்கான உலக இதய தினம் “செயலுக்கு இதயத்தை பயன்படுத்து” என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இது வெறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலிருந்து தெளிவான இலக்குகள் மற்றும் நோக்க உணர்வுடன் மக்களை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை குறிக்கிறது.

உலக இதய தினம் குறித்து தனியார் மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு கூறியதாவது: வளர்ந்த நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மக்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பரவலாக இளைய தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுவதால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ளவர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாரடைப்பு மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய இறப்புகளும் அதிகமாக உள்ளன.

இதனால் ஏற்படும் மருத்துவ செலவுகள் மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. இன்டர்ஹார்ட் ஆய்வு எனப்படும் பிரபலமான ஆய்வுகளில் ஒன்று, மரபணு கோளாறுகளை தவிர, 80 முதல் 90 சதவீதம் வரை உள்ள இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளை நன்கு கவனித்துக் கொண்டால் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், அவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்துவது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். புகைபிடித்தல் மற்றும் அதிகபடியான மது அருந்துதல் போன்ற சில போதை பழக்கங்களை தவிர்ப்பதும் முக்கியம்.

நீண்டகால பாரம்பரிய உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் இருந்து விரைவான மற்றும் மேற்கத்திய உணவு முறை மாற்றங்கள் உடல் பருமனை ஏற்படுத்துவதோடு, உட்கார்ந்த நிலை பணிகளும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. தொற்றுநோய், பசி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நமது முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, தற்போதைய இந்திய மக்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் வாழ்க்கை முறை மாற்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மாரடைப்புக்கான பிற வழக்கமான ஆபத்து காரணிகள் இல்லாவிட்டாலும், சரியான உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

எனவே, நம் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நொடியும் வேலை செய்யும் சோர்வடையாத நம் இதயம் என்னும் குதிரையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. இது உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போல் அல்லாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். நமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது பணிச்சூழலிலோ மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு நல்ல மன அமைதி, பொழுதுபோக்குடன் முக்கியமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகில், உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பது குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் குறைவாக உள்ளது, இது இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகை செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரேலா மருத்துவமனையின் இதய அறிவியல் மையத்தின் இயக்குனரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர் ஸ்ரீ நாத் விஜயசேகரன் கூறியதாவது: மோசமான வாழ்க்கை முறை விருப்பத்தேர்வுகள், மிகை ரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற காரணிகளின் காரணமாக உலகளவில் இதயநாள நோய்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் என்ற மதிப்பிடப்பட்டுள்ள இறப்புகளுக்கு காரணமாக இதயநாள நோய்கள் இருப்பதால், உலகளவில் இறப்புக்கான முதன்மை காரணமாக அது இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏற்படுகின்ற மொத்த உயிரிழப்புகளில் 25 சதவீதம் இதய நோய்களின் காரணமாக நிகழ்கின்றன. அத்துடன், இளவயது பிரிவைச் சேர்ந்தவர்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகும் அதிக இடர்வாய்ப்பில் இருக்கின்றனர்.

இருப்பினும், ஆரம்ப நிலையிலேயே நோய் அறிதலுக்கான கருவிகள், மிகக்குறைவான ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகள், ஸ்டென்ட்கள், ரோபோ உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைகள் போன்ற புரட்சிகர சிகிச்சை முறைகள் உள்பட மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சமீப ஆண்டுகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை பெரிதும் மேம்படுத்தி இருக்கின்றன. எனினும், இதயநாள நோய்களின் பெரும் சுமையைக் குறைக்க சிறந்த வழிமுறை என்பது அவை வராமல் தடுப்பதே. ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிப்பது, உடற்பயிற்சி, உடலுழைப்பு வழியாக உடற்தகுதியுடன் இருப்பது மற்றும் மனஅழுத்தத்தை முறையாக நிர்வகிப்பது ஆகியவற்றின் மூலம் நமது இதய ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆண்டுக்கு 1.7 கோடி பேர் உயிரிழப்பு
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% ஆகும். மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். இந்த இதய கோளாறுகள் இதய நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 85% ஆகும்.

The post இதயம் காப்போம்: உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும்; ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED தேசிய குழந்தைகள் தினத்தில் ஓர்...