திருப்புவனம் அருகே மயானத்தை இடித்து சாலை அமைக்க எதிர்ப்பு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் இடையே வைகை ஆறு செல்கிறது. ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

374 மீ. நீளம் 9.95 மீ. அகலம் 19 தூண்கள், 18 கண்களுடன் உயர்மட்டப் பாலம் கட்ட 2022 ஜூலை மாதம் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் லாடனேந்தலில் இருந்து பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

உயர் மட்டப் பாலத்திற்கு அருகே லாடனேந்தல் மயானத்தில் ஈம சடங்குகள், இறந்தவரின் அஸ்தியை ஆற்றில் கரைப்பதற்கு மக்கள் செல்வதற்காக ஆற்றுக்கும் மாரநாடு கால்வாய்க்கும் இடையே சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த சிறு பாலத்தை உயர்மட்டப் பாலம் கட்டுபவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முற்பட்ட போது பொதுமக்கள் திரண்டு வந்து பாலத்தை உடைக்க கூடாது என முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

லாடனேந்தல் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா,முன்னாள் கவுன்சிலர் சேதுராமன்,கோபி ஆகியோர் கூறியதாவது: லாடனேந்தல்-பெத்தானேந்தல் இடையே உயர் மட்டப் பாலம் கட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் பாலத்திற்கும் லாடனேந்தலுக்கும் இடையே இணைப்பு சாலை ஏற்கனவே திட்டமிட்டபடி அமைக்காமல் திடீரென்று திட்டத்தை மாற்றி ,மாயனத்தின் சுற்றுச்சுவர் சிறுபாலத்தை இடித்து மயானத்திற்குள் சாலை அமைக்க முயற்சிக்கின்றனர்.

அனைத்து சாதியினருக்கும் பொதுவான மயானம் இது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள மயானத்திற்குள் சாலை அமைத்தால் எதிர்காலத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இடநெருக்கடி ஏற்படும். எனவே ஏற்கெனவே திட்டமிட்டபடி மயானத்திற்குள் வராமல் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்றனர். பொதுமக்கள் திரண்டதால் பாலத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

The post திருப்புவனம் அருகே மயானத்தை இடித்து சாலை அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: