பீகாரில் தான் இந்த கூத்து…ரூ.2லட்சம் கொடுத்து ஐபிஎஸ் பதவி வாங்கிய 18வயது வாலிபர்: துப்பாக்கி, போலீஸ் சீருடையுடன் ஸ்டேஷன் சென்றபோது சிக்கினார்

ஜமுய்: பீகாரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதாமல் ரூ.2 லட்சம் கொடுத்து நேரடியாக ஐபிஎஸ் பதவிக்கு தேர்வாகி, போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று இருக்கிறார். என்னது என்று அதிர்ச்சியாக கேட்கிறீர்களா?. உண்மையாகவே இது பீகாரில் நடந்த சம்பவம் தான். அதுபற்றிய விவரம் வருமாறு: பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் மிதிலேஷ்குமார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. தனது ஆசையை அவர் தனக்கு நெருக்கமான மனோஜ்சிங் என்பவரிடம் தெரிவித்து இருக்கிறார். அவரும் உடனே என்ன ஐபிஎஸ் தானே ஆக வேண்டும்.

அதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று கூறியிருக்கிறார். என்ன ரூ.2 லட்சம் இருந்தால் ஐபிஎஸ் ஆகிவிடலாமா என்று மிதிலேஷ் அப்பாவியாய் கேட்டு இருக்கிறார். ஆமாம் என்று கூறியதும், உருட்டி, புரட்டி ரூ.2 லட்சத்தை தயார் செய்து மனோஜ்சிங் கையில் கொடுத்து எப்படியாவது என்னை ஐபிஎஸ் ஆக்கி விட்டுவிடு என்று கெஞ்சியிருக்கிறார் மிதிலேஷ்குமார். பணத்தை வாங்கிக்கொண்ட மனோஜ்சிங், ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சீருடை, கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்து, மிதிலேஷ்குமாரை அணியவைத்து இனி நீ ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி அசத்தி இருக்கிறார்.

மேலும் அருகில் உள்ள சிக்கந்தரா போலீஸ் நிலையத்திற்கு ஐபிஎஸ் அதிகாரி சீருடையில் அனுப்பி வைத்திருக்கிறார். சீருடையில் வந்த 18 வயது வாலிபர் மிதிலேஷ்குமாரை கண்டதும் போலீசார் அசந்து போய் விட்டனர். என்ன என்று கேட்டதும், நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று மிடுக்காக கூறியிருக்கிறார் மிதிலேஷ்குமார். பார்த்ததும் போலி என்று தெரிந்து கொண்ட போலீசார்,’ வாங்க ஐபிஎஸ் சார், சிக்கந்தரா காவல் நிலையம் உங்களை வரவேற்கிறது’ என்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று அவரிடம் விசாரித்து கையில் இருந்த துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து, மிதிலேஷ்குமாரை கைதுசெய்தனர்.

The post பீகாரில் தான் இந்த கூத்து…ரூ.2லட்சம் கொடுத்து ஐபிஎஸ் பதவி வாங்கிய 18வயது வாலிபர்: துப்பாக்கி, போலீஸ் சீருடையுடன் ஸ்டேஷன் சென்றபோது சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: