மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு

*மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் : மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மனுக்களுடன் பல்வேறு அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த அரிய மணல் ஆலைக்காக கிள்ளியூர் தாலுகாவில் 1144.0618 ஹெக்டர் நிலத்தில் மண் அகழ்வு நடத்திடவும், அதில் இருந்து தாதுமணல் பிரித்தெடுக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. இது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வரும் அக்டோபர் 1ம் தேதி பத்மநாபபுரம் ஆர்டிஒ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன. இந்தநிலையில் மீனவ கிராமங்களில் நேற்று மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. வரும் 26ம் தேதி நடைபெறுகின்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகின்ற கருத்து கேட்பு கூட்டம் ஆகியவற்றில் கடும் எதிர்ப்பை தெரிவிக்கவும் மீனவர்கள், அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் ஏராளமானோர் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். பூத்துறை ஊர் கமிட்டி சார்பில் அதன் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை நிறுவனத்திற்கு குமரி மாவட்டத்தில் அணு கனிமங்களான மோனசைட், சிர்கான், இல்மனேட் ரூட்டைல், சிலுமனைட் மற்றும் கார்னெட் அகழ்விப்புக்கு 1144.0618 ஹெக்டர் நில பகுதிகளான மிடாலம் ஏ, பி, சி, இனையம் புத்தன்துறை, ஏழுதேசம் ஏ, பி, சி மற்றும் கொல்லங்கோடு ஏ,பி போன்ற கிராம பகுதிகளில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதிக்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணை மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஒவ்வொரு வருடமும் கடலோர மக்கள் புற்று நோயினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் சராசரி இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர் இறக்கும் தருவாயில் பொருளாதாரம் பின்தங்கிய நிலைக்கு செல்வதோடு மருத்துவமனைக்குள் செலவிடும் தொகையினால் மீள முடியாத கடன் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். பல ஆண்டுகாலமாக குமரி மாவட்ட சமவெளி மக்களும் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர்.

எனவே கதிர்வீச்சு அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வு நிலையும் மேம்பட உதவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.இதனைப்போன்று மீனவர் மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் அளிக்கப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவிய வண்ணம் இருந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்படையும்

குமரி ஒற்றுமை இயக்கம் சார்பில் சுப உதயகுமாரன், குமரி ரசூல் உள்ளிட்டோர், நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், இந்த தாது மணல் அகழ்வு திட்டம் குமரி மாவட்ட மக்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும், கடலுக்கும் ஒட்டுமொத்த சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்புகளை உருவாக்கும். இதனால் சுற்றுச்சூழல் நாசமாவதுடன் கடல் அரிப்பு மேலும் மோசமடையும். வாழ்விடப் பாதுகாப்பு பாதிப்புகள் அதிகமாகும்.

நோய்கள் பெருகும். வேலை, வருமானம், பாதுகாப்பு கெடும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையும் சூழ்நிலை உள்ளது. எனவே மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை மற்றும் தனியார் மணல் ஆலைகளால் இதுவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்திருக்கும் சுற்றுச்சூழலை பாதிப்புகளை மனித இழப்புகளை, தாக்கங்களை ஆய்வு செய்து ஒன்றிய மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மணவாளக்குறிச்சி ஆலை விரிவாக்கத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தக்கலையில் நடைபெறுகின்ற கருத்து கேட்பு கூட்டத்தை தமிழக அரசு நிபந்தனைகளை இன்றி நீக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கேட்பு கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

முக்குவர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளித்த மனுவில், ‘மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை சார்பில் கிள்ளியூர் தொகுதி கடற்கரை மற்றும் சமவெளி கிராமங்களில் 11,000 ஹெக்டர் பரப்பளவு மணல் எடுப்பதற்காக நிலங்களின் சர்வே எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த அறிவித்துள்ளது. எனவே அனைத்து கடலோர கிராம மக்களும் திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவிக்க தயாராக உள்ளோம். சட்டம் ஒழுங்கு நிலையை மனதில் கொண்டு இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

The post மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: