இந்நிலையில் பத்திரப்பதிவிற்கு கூடுதலாக பணம் வசூலிக்கும் சார் பதிவாளர் அலுவலகங்கள் குறித்து கிடைத்த புகாரின் பேரில் மாநிலம் முழுவதும் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் மூர்த்தி தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரையும் அலுவலக வளாகத்திற்குள் வைத்து அலுவலக கிரில் கேட்டை உள்பக்கமாக பூட்டி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த கணக்கில் வராத பணத்தை அலுவலக மதில் சுவர் மீது வீசி எறிய, அதனை அதிகாரிகள் கைப்பற்றி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்களை விசாரணைக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 8 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத சுமார் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய ஆவணங்களும், கோப்புகளும் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.2 லட்சம் பறிமுதல்? முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் appeared first on Dinakaran.