சென்னை: ஓட்டல் உரிமையாளரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் தொழில்துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் மன்னிப்புக் கோரியிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில்; அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு. ஒன்றிய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.
அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம். கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயல்: ஜெயக்குமார் கண்டனம் appeared first on Dinakaran.