சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டவுடனேயே அக்கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. 67 பேர்களை கொண்ட பாஜகவின் முதல்கட்ட பட்டியலில் 10க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் விடுபட்டது சர்ச்சைக்குள்ளானது. மேலிடத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பாஜக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா, சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் தாஸ் நாபா, பாஜக விவசாயிகள் அணித் தலைவர் சுக்விந்தர் செரோன், ஓபிசி அணித் தலைவர் கரண்தேவ் கம்போஜ், பாஜக முக்கிய நிர்வாகியான ஷம்ஷேர் சிங் கர்காரா உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் பாஜகவின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. பாஜக ஓபிசி அணித் தலைவர் கரண்தேவ் கம்போஜை சந்திக்க சென்ற ஹரியானா முதலமைச்சர் உடன் கைகுலுக்க கூட அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அதே நேரத்தில் கரண்தேவ் கம்போஜ், காங்கிரஸ் மூத்த நிர்வாகியான பூபேந்தர் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் சிங்கும் பாஜக தனக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேட்சையாக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். மின்துறை அமைச்சர் ரஞ்சித் சவுதாலா தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக எம்.பி. நவீன் ஜிண்டாலின் தாயாரான சாவித்ரி ஜிண்டாலும் பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்க திட்டமிட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
The post உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக: தேர்தலில் சீட் கிடைக்காத பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து விலகல்!! appeared first on Dinakaran.