சென்னை அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை பரப்பும் சர்ச்சைப் பேச்சு திருப்பூரில் மகாவிஷ்ணு அறக்கட்டளை அலுவலகத்தில் போலீஸ் விசாரணை

திருப்பூர்: சென்னையில் அரசு பள்ளியில் சர்ச்சையான முறையில் பேசிய மகாவிஷ்ணுவின் அறக்கட்டளை அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 4 தினங்களுக்கு முன் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் முன் ஜென்மம், மறுபிறவி குறித்தும், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் அப்பள்ளியின் மாற்றத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சு என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவாற்றியது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துபாளையம் பகுதியில் மட்டுமே அவரது அறக்கட்டளை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்துக்கு அவிநாசி போலீசார் நேற்று சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதுரையை பூர்வீகமாக கொண்ட மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் இருப்பதும், தமிழ்நாட்டில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரியவந்தது. அவிநாசியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து உணவு தயாரித்து தினந்தோறும் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு நபர்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர். மகாவிஷ்ணுவுக்கான பின்புலம், வருமானம், இவரது யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ பதிவுகள், ஏற்கனவே எங்கெங்கு உரையாற்றி உள்ளார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மகாவிஷ்ணு தற்போது சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் திரும்பி வருவார் எனவும் போலீஸ் விசாரணையின்போது தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாவிஷ்ணு சமீப காலங்களில் அறக்கட்டளை துவக்கி யூ டியூப் மூலம் ஆன்மிக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்துள்ளார். அவர் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்த போலீசார் அங்கிருந்து சென்றனர். மேல் அதிகாரிகளின் உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கையில் நாங்கள் இறங்குவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

The post சென்னை அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை பரப்பும் சர்ச்சைப் பேச்சு திருப்பூரில் மகாவிஷ்ணு அறக்கட்டளை அலுவலகத்தில் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: