விமானத்தின் கழிவறையில் பதுங்கியிருந்து ரவுண்டு ரவுண்டாக புகை விட்ட பயணி: போலீசில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வந்த விமானத்தில், கழிவறைக்குள் சென்று புகைபிடித்த திருவாரூரை சேர்ந்த பயணியை விமான பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து விடுவித்தனர். குவைத் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 178 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரூக் (42) என்ற பயணி, தனது இருக்கையை விட்டு, அடிக்கடி எழுந்து விமான கழிவறைக்கு சென்று வந்தார். அங்கு அவர் புகை பிடித்துள்ளார். அவர் கழிவறைக்கு சென்று திரும்பும்போதெல்லாம் புகைப்பிடித்த நெடி வீசியுள்ளது.

இதை அறிந்த விமான பணிப்பெண்கள், பயணி பாரூக்கை விசாரித்தபோது அவர் அதை மறுத்து பொய் பேசியுள்ளார். இதனால் தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து, பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி விமானம் நேற்று முன்தினம் மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, விமானத்தில் புகைபிடித்த பயணி பாரூக்கை சுற்றி வளைத்து பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரூக் குவைத்தில் 2 ஆண்டுகள் டிரைவராக வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். ‘நான் தெரியாமல் அந்த தவறை செய்து விட்டேன். என்னை மன்னித்து விட்டு விடுங்கள். என் மீது வழக்கு போட்டால், நான் மீண்டும் வேலைக்காக குவைத் செல்ல முடியாது’ என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து பாரூக்கை போலீசார் கடுமையாக எச்சரித்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினர். அதன் பின்பு பாரூக்கை விடுவித்து, சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post விமானத்தின் கழிவறையில் பதுங்கியிருந்து ரவுண்டு ரவுண்டாக புகை விட்ட பயணி: போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: