இதற்கிடையில் , இது தொடர்பாக அரசு மருத்துவர்களால் 2020 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , அரசு மருத்துவர்களின் கோரிக்கையினை ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. அதன்படி மருத்துவர்களுக்கு கூடுதல் படிகள் வழங்கப்படும் என்றும், அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கினை தாக்கல் செய்துள்ளது.
இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இந்த மனுவிற்கு 28-10-2024-க்குள் பதில் மனு அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அரசு மருத்துவர்களை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பதும் ஜனநாயகத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரான செயல்.
எனவே, அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசாணை எண் 354-ஐ நடைமுறைப்படுத்துதல் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றில் எது அரசு மருத்துவர்களுக்கு சாதகமாக உள்ளதோ அதனை செயல்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பி.எஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.