திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம்: தேவஸ்தானம் அதிரடி

திருமலை: ஏழுமலையான் கோயிலில் ஆதார் கொண்டு வந்தால் மட்டுமே லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.300 டிக்கெட், சர்வ தரிசனம், விஐபி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ரூ.50 கட்டணம் செலுத்தி லட்டுக்களை பெற்று வந்தனர். இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லட்டு பிரசாதத்தை சிலர் அடுத்தடுத்த கவுண்டர்களில் திரும்ப திரும்ப பெற்று புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் இனி ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ரூ.50 என இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு இலவச லட்டு மற்றும் கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று கூடுதல் இ.ஓ. வெங்கய்ய சவுத்திரி நிருபர்களிடம் கூறியதாவது: எந்தவித தரிசன டோக்கன் இல்லாத பக்தர்களுக்கும் ஆதாருடன் லட்டு பிரசாதம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்டு கவுண்டர் வளாகத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு 48 மற்றும் 62 ஆகிய இரண்டு கவுன்டர்களில் ஆதார் காண்பித்து லட்டு பெற்றுக் கொள்ளலாம்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம்: தேவஸ்தானம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: