சென்னை: சம்பந்தப்பட்ட பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கிருஷ்ணகிரி மாணவி வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி தனியார் பள்ளி போலி என்.சி.சி. முகாமில் மாணலிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது; காவல் ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில்; அரசு அறிக்கையில் மாணவி பெயரைத் தவிர மற்ற அனைத்து விவரத்தையும் கூறி அடையாளத்தை அம்பலப்படுத்தி விட்டனர். விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிய அரசு மாணவிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள்; பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்?. சம்பந்தப்பட்ட பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி தரப்பில் கூறியதால் மாணவிகள் புகார் அளிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூற அவர்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கில் இதுவரை பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகல் 2:15க்கு ஒத்திவைத்தனர்.
The post சம்பந்தப்பட்ட பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.. கிருஷ்ணகிரி மாணவி வழக்கில் ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.