×

களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியது

*வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் முடிக்கப்படுமா?

களக்காடு : களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக முடங்கி கிடப்பதால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
களக்காடு அருகே மேலக்கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, காமராஜ்நகர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அத்தியாவசிய பணிகளுக்காகவும், வெளியூர்களுக்கு செல்லவும், களக்காட்டிற்கு தான் வர வேண்டும். களக்காடு – மஞ்சுவிளை இடையே கீழக்கருவேலங்குளத்தில் ஓடும் உப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட பாலம் வழியாக தான் அவர்கள் களக்காட்டிற்கு வர வேண்டும். இந்த பாலம் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளை கடந்து விட்டதால், பழுதடைந்து காணப்பட்டது.

மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் போது பாலம் நீரில் மூழ்கி விடுவதால் அவ்வழியாக போக்குவரத்து தடைபட்டு மேலக்கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, காமராஜ்நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் தனித்தீவாக துண்டிக்கப்பட்டு வந்தது. பச்சையாறு அணைக்கும் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து உப்பாற்றில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் கட்டுமான பணிகள் தொடங்கியது. பழைய தரை மட்ட பாலம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. பாலம் கட்டுமான பணிகள் 3 மாதங்களாக முடங்கி கிடப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாலம் கட்டுமான பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் பருவமழை தொடங்கும் நிலை உள்ளதால், மழையின் காரணமாக தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டால் மீண்டும் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, தனி தீவாகும் அபாயம் நிலவுகிறது. எனவே புதிய பாலம் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post களக்காடு அருகே ரூ.1.50 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமான பணி 3 மாதங்களாக முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Northeast Monsoon ,Melakaruvelangulam ,Kalakkadu ,Keezhappatti ,Manjuvilai ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை