*மாவட்ட கலெக்டர் தகவல்
திருவாரூர் : மாற்று திறனாளிகள் தரும் எழுத்து பூர்வமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய உதவி செய்யப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுதிறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வானது நேற்று கலெக்டர் அலுவலகத்ததில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலஅலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலும், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த முகாமை துவக்கி வைத்து கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி திட்டம், முதல்வரின் முகாம் திட்டம் மற்றும் உங்களை தேடி உங்கள் ஊரில் ஆகிய திட்டங்களின் மூலம் 197 மாற்றுதிறனாளிகளிடமிருந்து 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு பெறப்பட்ட விண்ணப்பதாரர்கள் இன்று (நேற்று) நேரில் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 100 நபர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவரை கொண்டு மருத்துவ பரிசோதனையும், வட்டார போக்குவரத்து அலுவலரை கொண்டு வாகனம் இயக்கும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு இந்த அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்படும் பயனாளிகள் குறித்த விபரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் மோட்டார் வாகனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்ட அளவில் மாதம் ஒரு முறை கலெக்டர் அலுவலகத்திலும், திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்ட அளவில் சிறப்பு குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்குகீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
மேலும் முகாமிற்கு வரும் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டு வரவேண்டும்.
இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். முகாமில் பயனாளிகள் தேர்வுகுழு உறுப்பினர்களான மருத்துவர் நவீன், வாகன போக்குவரத்து ஆய்வாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மாற்று திறனாளிகள் தரும் எழுத்து பூர்வமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய உதவி செய்யப்படும் appeared first on Dinakaran.