வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் தரை பாலம் உடைந்ததால் வால்பாறை -கேரளா இடையே கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இந்நிலையில் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியும், ஆறாகவும் ஒடுகிறது.கேரள எல்லைக்கு உட்பட்ட மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் ஒன்றின் பக்கவாட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவருடன் தரை பாலமும் இடிந்து விழுந்தது. மேலும் சாலையில் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்து, மற்றும் லாரிகள் சென்றால் கவிழ்ந்து விடும் நிலை உள்ளதால் கனரக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் கேரளாவில் இருந்து விறகு லோடு ஏற்றி வந்த 10க்கும் மேற்பட்ட தமிழக லாரிகள் சிக்கி உள்ளது. கேரளா அரசு விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதே போன்று வால்பாறை மற்றும் ஆழியாறு பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 1,2 மற்றும் 3ம் கொண்டை ஊசி பகுதியில் போக்குவரத்து நேற்று காலை ஸ்தம்பித்தது.நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்தை சீராக்கினர்.மேலும் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது.
The post மளுக்கப்பாறை எஸ்டேட் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.