வேலூர் : வேலூர் பாலாற்றில் தொடர்ந்து கொட்டி எரிக்கப்படும் குப்பைகள், கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் பாய்ந்தோடும் கழிவுநீர் என்று நிலத்தடி நீராதாரம் மாசடையும் அபாயம் உள்ளது. அதை கண்டு கொள்ளாமல் மாசுக்கட்டுப்பாடு வாரியமும், மாநகராட்சியும் மவுனம் சாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பருவ மழை சீசனில் மட்டுமே சிற்றோடையாக காட்சி தரும் பாலாறு, சீசன் முடிவடையும் தருணங்களில் வறண்ட பாலைவனமாய் மாறி வேதனையை ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் இப்பாலாறு வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விஷாரம், ராணிப்பேட்டை, வாலாஜா வட்டாரங்களில் செயல்படும் தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுநீரை எப்போதும் சுமந்து செல்லும் ஆறாகவே தொடர்ந்து விளங்கி வருகிறது.இது ஒருபுறம் என்றால் பாலாறு தமிழகத்தில் தடம் பதிக்கும் இடம் தொடங்கி அது கடலில் சேரும் இடம் வரை அதன் இருபுறமும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படும் குப்பைகளையும் தாங்கி ஒருவித துர்நாற்றம் வீசும் ஆறாகவே மாறிப்ேபாயுள்ளது.
இதில், குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் இருந்தும் குப்பைகள் பாலாற்றில் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சியை பொறுத்தவரை தினமும் சுமார் 200 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இக்குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்கா குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் தூளாக்கப்பட்டு தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவைக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் இயங்கி வருகின்றன.
ஆனாலும், சேண்பாக்கம், விருதம்பட்டு, காங்கேயநல்லூர், சத்துவாச்சாரி, ரங்காபுரம் பாலாற்றுப் படுகைகளிலும், அரியூர், தொரப்பாடி, சதுப்பேரி, ஓட்டேரி ஆகிய நீர்நிலைகளின் கரைகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் குவிக்கப்பட்டு ஆங்காங்கே தீ வைத்து எரிக்கப்படுகிறது.இந்த அத்துமீறல்கள் தொடர்பாக தொடர்ந்து தினகரன் நாளிதழில் சுட்டிக்காட்டியும் இச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் பாலாற்றில் கருமை நிறத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் பாய்ந்தோடி வருகிறது. அதனையும் ஆபத்தான முறையில் கடந்து சத்துவாச்சாரியில் இருந்து காங்கேயநல்லூருக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இப்படி பாழாகி வரும் பாலாற்றை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கண்டும் காணாமல் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் காலையும் இதுபோல் காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டி தீ வைக்கப்பட்டதால் நள்ளிரவு வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. எனவே பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, குப்பை கொட்டுவதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வேலூரில் அவலத்தை சுட்டிக்காட்டியும் பயனில்லை பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் மாசடையும் நிலத்தடி நீராதாரம் appeared first on Dinakaran.