வேலூர் கோட்டை மைதானத்தில் கூடுதல் பூங்கா அமைக்க ஓசூரில் இருந்து லாரியில் வந்தடைந்த புற்கள்: நடவு செய்யும் பணிகள் தொடக்கம்

வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தை சுருக்கி கூடுதல் பூங்கா அமைக்கும் பணிக்காக ஓசூரில் இருந்து பூங்கா புற்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகரின் மையத்தில் திலகம் போல் அமைந்துள்ள தரைக்கோட்டையான வேலூர் கோட்டையை சுற்றி சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அகழி அதன் கழுத்தில் மணி மாலை போல் அமைந்துள்ளது. கோட்டை நுழைவு வாயிலின் தெற்கில் மைதானத்தின் ஒரு பகுதி புல்வெளி பூங்காவாக தொடர்ந்து பராமரிப்பில் இருந்து வருகிறது. வடக்கில் அமைந்துள்ள பூங்கா அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான அம்சங்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டை உள்ளது. அதை ஒட்டிய மைதானம், கோட்டை நுழைவுப்பகுதியில் இருபுறமும் உள்ள பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கோட்டை மைதானத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

அதுமட்டுமின்றி வேலூர் மாநகர மக்களுக்கு பெரிய மைதானமாக திகழ்ந்து வருகிறது. அரசு பொருட்காட்சிகள், தனியார் சர்கஸ் நிகழ்ச்சிகள், கல்வி, புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாநகர மத்தியில் பொது பயன்பாட்டிற்காக ஒரே இடமாக கோட்டை மைதானம் மட்டுமே இருந்து வருகிறது. இந்த கோட்டை மைதானத்தின் அளவை சுருக்கி ஒரு பகுதியில் கூடுதல் பூங்கா அமைக்கும் பணியை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது. தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள பூங்காயை ஓட்டியே தற்போது உழவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்று ஓசூரில் இருந்து பூங்காவுக்கான புற்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு நடவு செய்யும் பணியை தொடங்கினர். இதன்மூலம் பூங்காவின் அளவு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

The post வேலூர் கோட்டை மைதானத்தில் கூடுதல் பூங்கா அமைக்க ஓசூரில் இருந்து லாரியில் வந்தடைந்த புற்கள்: நடவு செய்யும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: