அம்பை வட்டாரத்தில் நெற்பயிர்களில் படைப்புழு தாக்குதல்

 

அம்பை,ஆக.19: அம்பை வட்டாரத்தில் படைப்புழு பூச்சித் தாக்குதலுக்குள்ளான வயல்களில் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அம்பை வட்டாரத்தில் உள்ள அயன்சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், வைராவிக்குளம் ஆகிய கிராமங்களில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் படைப்புழு தாக்குதால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து அம்பை வட்டாரத்தில் வயல்களில் நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமையில் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் சுபசெல்வி, கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் இணைப் பேராசிரியர் ஆல்வின், அம்பை வேளாண் உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார், வேளாண் அலுவலர் ஷாகித் முகைதீன், உதவி அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது இலை சுருட்டுப்புழுத்தாக்குதல் ஆங்காங்கே தென்பட்ட அயன்சிங்கம்பட்டி விவசாயிகளிடம் உடனடியாக பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஜமீன் சிங்கம்பட்டி, சடையபுரம் கிராம வயல்களில் சைபர் மெத்திரின் கலந்த மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தியதால் படைப்புழு ஆங்காங்கே தென்பட்டதையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட வயல்களில் தழைச்சத்து உரமிடுவதை தவிர்த்திடுவதோடு, பறவைகள் அமர்ந்திட வயலில் குச்சிகள் மூலம் இருக்கைகள் அமைத்திடவும், பயிர் சுழற்சி முறையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவும் நிபுணர் குழுவினர் வலியுறுத்தினர்.

நெற்பயிரில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மண்ணெண்ணெயை விட்டு அதில் புழுக்களை விழச் செய்து அழிக்கலாம். தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு குளோர் அன்ட்ரனிலிப்ரோல் 60 மிலி, புளுபென்டியாமைடு 50 மிலி இந்த இரண்டில் ஒரு மருந்தை மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் மூலம் பயிர்களின் இலை மற்றும் வேர் பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களின் அருகில் உள்ள வயல்களிலும் மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தினார்.

The post அம்பை வட்டாரத்தில் நெற்பயிர்களில் படைப்புழு தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: