பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!

நன்றி குங்குமம் தோழி

விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 117 வீரர்-வீராங்கனையினர் துப்பாக்கிச்சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, மல்யுத்தம், வில்வித்தை, பாக்ஸிங், கோல்ஃப், டென்னிஸ், நீச்சல், பாய்மர படகுப் போட்டி, குதிரையேற்றம், ஜூடோ, துடுப்பு படகு, பளுதூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து முதன் முறையாக 12 பேர் ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகியுள்ளனர். நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர்
ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில்
பங்குபெறும் மற்ற வீராங்கனைகள் பற்றிய முன்னோட்டம்…

வித்யா ராமராஜ் (தடகளம்)

தமிழ்நாட்டில், கோவை பாலத்துறை மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் வித்யா. தற்போது ரயில்வேயில் வேலை பார்த்து வரும் இவர், வேலையில் ஈடுபட்டுக்கொண்டே போட்டிக்கான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். தடகளத்தில் மாநில, தேசிய, ஆசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று, மாநில அளவில் சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் இவர், கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், அரையிறுதி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் கடந்தார்.

இதன் மூலம் இந்தியாவின் தங்க மங்கை எனப்படும் பி.டி.உஷாவின் தேசிய சாதனையான 55.42 விநாடிகளை சமன் செய்து அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் 400 மீட்டர் பந்தய தூரத்தை 55.68 விநாடிகளில் கடந்த வித்யா ராமராஜ் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார். தற்போது பாரீஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

சுபா வெங்கடேசன் (தடகளம்)

தமிழ்நாட்டின் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் சுபா வெங்கடேசன் (24). 2023ல் ஆசியப் போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டத்திலும், மகளிர் (400 மீட்டர்) தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 2024ல் பெங்களூருவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 52.34 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் கலந்து கொண்டு 3 போட்டிகளில் வென்று பதக்கங்களையும், தேசிய அளவிலான 20 போட்டிகளில் வெற்றி பெற்று தடகளப் பிரிவில் தனி முத்திரை பதித்துள்ளார். பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார். பல தேசிய பதக்கங்களை பெற்ற சுபா வெங்கடேசன் ஒலிம்பிக் பதக்க கனவோடு பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

நேத்ரா குமணன் (பாய்மர படகு)

சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நேத்ரா குமணன், 2024 ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதிப் பெற்றுள்ளார். இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இவர் தகுதிப் பெறுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக 2020 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றிருந்தார். 2014 மற்றும் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர். அதில் முறையே 7வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்தார். ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டிக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவுகளில் பயிற்சி எடுத்துள்ளார் நேத்ரா குமணன்.

இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிச்சுடுதல்)

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். 2019ல் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வெல்லும் 3 வது இந்தியர் ஆவார். 20 வயதே ஆன வீராங்கனை இளவேனில், சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை தட்டிச் சென்றவர். முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4வது இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டவர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகி இருக்கும் இவர் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்.

ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்)

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா அகுலா டேபிள் டென்னிஸ் போட்டியில் இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். 2022ல் கலப்பு இரட்டையர் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக ஒரு இடம் முன்னேறி, உலகின் சிறந்த டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 38வது இடத்திலும் இந்திய அளவில் முதல் டேபிள் டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். இதனால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஜோதி யார்ராஜி (தடகளம்)

ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அதிக தேசிய சாதனைகளை செய்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜோதி யார்ராஜி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் முதன் முறையாக களமிறங்குகிறார். தேசிய சாதனையை (12.78 விநாடிகள்) தன்வசம் வைத்துள்ள ஜோதி யார்ராஜி 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சீனாவில் 2021ல் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். அதிக தேசிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பதால் ஒலிம்பிக்கிலும் ஜொலிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதிதி அசோக் (கோல்ஃப்)

பெங்களூருவைச் சேர்ந்த அதிதி அசோக் பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் (LET) பட்டத்தை வென்ற இளம் பெண் கோல்ஃப் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் கோல்ஃப் வீரர். 2020ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 2020ல் அர்ஜுனா விருது பெற்றார். 2023ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இளம் கோல்ஃப் வீரர் என்பதால் தங்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார்.

நிகத் ஜரின் (குத்துச்சண்டை)

தெலுங்கானாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை நிகத் ஜரின். ஏற்கனவே இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு 52 கிலோ பிரிவில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை வென்றார். அதற்கு முன்பு அதே ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லைட்-ஃப்ளை வெயிட் பிரிவில் தங்கம் வென்றார். 2023ல் 50 கிலோ பிரிவில் மற்றொரு உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை வென்று அசத்தினார். 2023 ஹாஞ்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற்றார். தற்போது 50 கிலோ பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட உள்ளார்.

பஜன் கவுர் (வில் வித்தை)

தனது 18வது வயதில் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். ஹரியானாவைச் சேர்ந்த திறமையான வில்வித்தை வீராங்கனையான இவர் ஆசிய விளையாட்டுப் பெண்கள் அணியில் வெண்கலப் பதக்கமும், 2022ல் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் சர்க்யூட் போட்டிகளில் பெண்கள் அணியில் 2 தங்கமும், பெண்கள் தனிநபர் அணியில் வெள்ளியும் வென்றுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் பெண்கள் அணியில் 2 வெண்கலம் வென்றுள்ளார். துருக்கியின் அண்டலியாவில் நடந்த இறுதி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தனது முதல் சர்வதேச தங்கத்தை
வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார்.

மீராபாய் சானு (பளு தூக்குதல்)

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து மகளிர் பளு தூக்குதலில் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிறார். பதக்கம் வெல்லக்கூடியவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் 3வது முறையாக களமிறங்கும் அவர், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார். மீராபாய் சானு பதக்கம் வெல்லும் போட்டியாளராக கருதப்பட்டாலும், பலத்த காயத்தில் இருந்து மீண்டு, அணிக்கு திரும்பியுள்ளார். அதனால் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கிறார்கள்.

சிஃப்ட் கவுர் சமரா (துப்பாக்கிச்சுடுதல்)

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சிஃப்ட் கவுர் சமரா தயாராகி வருகிறார். பஞ்சாபை சேர்ந்த சிஃப்ட் கவுர் சமரா 2023ம் ஆண்டில் வியக்க வைக்கும் வகையில் பிரித்தானியாவின் சியோனாய்ட் மெக்கின்டோஷின் உலக சாதனையான 469.6 புள்ளிகளை முறியடித்தார்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் நிகழ்வில் தங்கம் வென்றார். 2022ம் ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ISSF உலகக் கோப்பையில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். சிஃப்டின் இந்த வெற்றிகளால் அவருக்கு இந்திய தேசிய அணியில் இடம் கிடைத்தது. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 3P பிரிவில் தனிநபர் தங்கம் வென்றார். பாரீஸ் 2024 ஒலிம்பிக் அவர் வரலாற்றில் தனது பெயரை பொறிக்கும் மேடையாக இருக்கலாம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்! appeared first on Dinakaran.

Related Stories: