நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைகூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளை சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை கொண்டும் தமிழ் மொழிக்காக அத்தனையும் செய்பவர்போல காட்டிக்கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது அந்த தமிழ்மொழிக்கு குறைந்த அளவில்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே.ஈஸ்வரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தகவல்கள் கேட்டிருந்தார். அதற்கு ஆர்டிஐ தந்துள்ள பதில் அதிர்ச்சியளித்து உள்ளது. 24 ஆயிரம் பேர் தாய் மொழியாய் பேசும் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,869 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 8 கோடி பேர் தாய் மொழியாய் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
இந்தியாவில் மொழிகளின் வளர்ச்சிக்காக முதன் முதலில் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் டெல்லியில் உள்ள மத்திய இந்தி இயக்குனரகம் மற்றும் ஆக்ராவில் உள்ள மத்திய இந்தி கல்வி நிறுவனம் ஆகியவையாகும். இவை இரண்டும் 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டவையாகும். ஒருகாலகட்டத்தில் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் இந்தியை மிக தீவிரமாக திணித்தபோதும் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. இந்தியாவில் இந்தியை தாய்மொழியாக பேசக்கூடியவர்கள் 52 கோடி பேர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த 2 இந்தி மொழி வளர்ச்சி கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒன்றிய அரசு இந்தி வளர்ச்சிக்காக செலவிட்ட தொகை ரூ.646 கோடி மட்டுமே.
இந்தியாவில் உருது மொழி பேசுகின்ற மக்கள் 5 கோடி பேர் இருக்கிறார்கள். இந்த மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தேசிய உருது மொழி வளர்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.777 கோடியாகும். இந்தியாவில் 20 லட்சம் மக்களால் பேசப்படுகின்ற சிந்திமொழி வளர்ச்சிக்காக 1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சிந்தி மொழி வளர்ச்சி நிறுவனத்திற்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.40 கோடியாகும்.
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக 2008ம் ஆண்டு செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதுவரை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாக தமிழ் ஆய்வு மையம் இருந்தது. இந்தியாவில் 8 கோடி பேர் பேசும் செம்மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை ரூ.100 கோடி மட்டுமே.
தமிழ், இந்தி, சிந்தி, உருது, சமஸ்கிருதம் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காக செயல்படும் ஒன்றிய அரசின் ஒரே நிறுவனம் மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகளின் கல்வி நிறுவனம் ஆகும். இதற்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனம் 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்பே இது தொடங்கப்பட்டதாகும். இந்தியா முழுவதும் 70 கோடிக்கு மேல் தாய் மொழியாக கொண்டுள்ள மற்ற அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.275 கோடி.
இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த மாநிலத்தின் மொழியும் அல்ல. ஆனால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.2,869 கோடி. இதன்மூலம் மொழிகள் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி பாரபட்சமாக உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் சமஸ்கிருதம் தாய்மொழியாக கொண்ட ஒரு நபருக்கு ரூ.11 லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.13.50 மட்டுமே செலவிடப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு மிக மிக குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது.
இந்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் செலவிடுகின்ற தொகையில் 61 சதவீதம் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே செலவிடுகிறது என்பதை இந்த தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் நீண்ட நெடுங்காலமாக வசித்து வருகிறார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழையும், தமிழ் மொழியின் தொன்மைகளையும், தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கணங்களையும் கொண்டு சேர்ப்பது ஒன்றிய அரசின் கடமையாகும். ஆனால் இந்தியாவை சமஸ்கிருத நாடாக உருவாக்குகின்ற வகையில் ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதாகும்.
சமஸ்கிருத கல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றியமைத்த ஒன்றிய அரசு
சமஸ்கிருதத்தை தீவிரமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக நிகர்நிலை பல்கலைக்கழக தகுதியில் இருந்த சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு மாற்றி இருக்கிறது. டெல்லி மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு 2021ம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகை ரூ.201.96 கோடி ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2022ம் ஆண்டில் அந்த நிதி ரூ.324 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்தியாவின் எந்த மொழிக்கும் இதுபோல நிதி அதிகரிக்கப்படவில்லை.
‘தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும்’
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே.ஈசுவரன் கூறியதாவது: உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செம்மொழி தமிழ் வளர்ச்சி கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். தமிழ்மொழியில் உள்ள சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற புத்தகங்களை உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து உலகெங்கும் கொண்டு செல்வது இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாகும். தமிழ் மொழியில் உள்ள படைப்புகளை ஆய்வு மேற்கொள்வதற்கும், ஆய்வு செய்கிறவர்களுக்கு நிதி உதவி செய்யவேண்டும்.
சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கு எடுக்கிற முயற்சியைபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியின் வளர்ச்சிக்கும் ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்கப்படவேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்லவும், அதிக தமிழ்மொழி ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பியுள்ளோம். தொடர்ந்து பல கல்லூரிகளுக்கு சென்று பூர்த்தி செய்த தபால் அட்டைகளில் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
* இந்தியாவில் சமஸ்கிருதம் தாய்மொழியாக கொண்ட ஒரு நபருக்கு ரூ.11 லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.13.50 மட்டுமே செலவிடப்படுகிறது.
* தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளை சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை கொண்டும் தமிழ் மொழிக்காக அத்தனையும் செய்பவர்போல காட்டிக்கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது அந்த தமிழ்மொழிக்கு குறைந்த அளவில்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
The post மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசு பாரபட்சம்: 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ.2,869 கோடி; தமிழுக்கு வெறும் ரூ.100 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.