அதானிக்காகவே மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் அதானிக்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டும், பல வகையிலும் சமரசம் செய்தும் திட்டங்கள் கைமாறிய சம்பவங்கள் அரங்கேறின. தற்போது தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி பலத்துடன் 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையிலும், அதானிக்காக விதிகளில் திருத்தம் செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கிங்கெனாதபடி அனைத்து துறைகளிலும் கால்பதித்துள்ள அதானி குழுமத்தின் அதானி பவர் நிறுவனம், 15,250 மெகாவாட் உற்பத்தி திறனுடன் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. 9,153 மெகாவாட் மின் சப்ளைக்காக குஜராத், மாகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா பஞ்சாப் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவிர, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் 1,600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ‘கோட்டா அனல்மின் நிலையம்’ நிறுவியுள்ளது. இதில் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆலைகள் செயல்படுகின்றன. 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, 2023 ஏப்ரல் மாதம் 800 மெகாவாட் உற்பத்தி ஆலை, 2023 ஜூன் மாதம் மற்றொரு 800 மெகாவாட் உற்பத்தி ஆலை செயல்படத் துவங்கியது. இந்த திட்டம் வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே துவக்கப்பட்டது. இதற்காக அதானி பவர் ஜார்க்கண்ட் லிமிடெட், வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியத்துடன் 2016 ஆகஸ்ட் 11ம் தேதி ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் தற்போது வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து விட்ட நிலையில், ஜார்க்கண்டில் அதானி நிறுவியுள்ள மேற்கண்ட மின் திட்டத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு வங்கதேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனால், அதானியின் மின் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு பிரத்யேகமாக மின்சாரம் வழங்குவதற்கான 2018ம் ஆண்டில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல் சட்ட விதிகளில் ஒன்றிய அரசு கடந்த 12ம் தேதி திருத்தம் செய்துள்ளது. ‘மின் திட்டத்தின் மொத்த உற்பத்தி திறனில் இருந்து முழுமையாக அல்லது பயன்படுத்தப்படாத (விற்காத) மின்சாரத்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு வசதியாக அத்தகைய மின் உற்பத்தி நிலையத்தை இந்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைக்க ஒன்றிய அரசு அனுமதிக்கலாம்’ என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், வங்கதேசத்துக்கு அதானி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் எந்த நேரமும் ரத்தாகலாம் என்ற நிலை எழுந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவசர கதியில் மின்சார ஏற்றுமதிக்காக சட்ட விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்த விதிகளை ஒன்றிய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எனவே, அதானிக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒன்றிய பாஜ அரசு ஏற்றுமதி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிநபருக்காக சட்டங்கள், விதிகள் திருத்தப்படுவது ஒருபோதும் ஏற்க முடியாதது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு தனி மனிதரின் நலனுக்காக செயல்படுவது, அவருக்காக எதையும் செய்வது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மின் உற்பத்தி துறையில் தனிப்பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமத்துக்கு மட்டுமே ஒன்றிய அரசு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது என, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து ஜார்க்கண்டில் உள்ள தனது அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதில் இருந்து மின்சாரத்தை இந்தியாவில் விநியோகிப்பதற்காக அதானி குழுமத்துக்கு ஒன்றி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனக்கு நெருக்கமான நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல்வேகத்தில் செயல்படுகிறார்.
அதானி முன்பு நிலக்கரி இறக்குமதியில் லாபம் ஈட்டி வந்தார், இப்போது இந்த மின்சாரத்தை இந்திய மக்களுக்கு விற்பதன் மூலம் இன்னும் அதிக லாபம் பெறுவார். வங்கதேசத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அதானி குழுமம் இந்தியாவிலேயே மின்சாரத்தை விற்கும் வகையில் ஒன்றிய அரசு சலுகைகளை வழங்கியிருக்கிறது. மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் இதுதான். இது மிகவும் சர்ச்சைக்குரியது, என தெரிவித்துள்ளார்.
* ஜார்க்கண்ட் கோட்டா அனல்மின் உற்பத்தி திட்டம்
2016 பிப்: அதானி நிறுவனம், ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் தலா 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை அமைக்க, 2016 பிப்ரவரியில் விண்ணப்பித்தார்.
2016 ஆக. 11: இந்தியாவில் மேற்கண்ட அனல் மின் நிலையத்தை அமைத்து, அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் வங்கதேசத்துக்கு சப்ளை செய்ய வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
2017 ஆக.31: மின் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
2018, டிச: மின் உற்பத்தி ஆலை அமைக்க அதானிக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 50 ஏக்கர் பரப்பில் மரங்களை, உள்ளூர் மக்கள் எதிர்ப்பை மீறி அதானி குழுமம் அகற்ற துவங்கியது.
2020ல் மின் உற்பத்தி ஆலை திட்டத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் இவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜார்க்கண்ட் அரசு தரப்பில் மறுக்கப்பட்டதை தொடர்நது, அதானி குழும மின் நிலைய பணியை துவங்கியது.
2023 ஏப்.6 முதல் ஆலையும், ஜூன் 26ல் 2வது ஆலையும் செயல்பட துவங்கியது.
* கடன் மட்டும் 80 சதவீதம்
ஜார்க்கண்டில் அதானி அமைத் மின் திட்டத்துக்காக, ஜார்க்கண்ட் அரசின் மின் நிதி கழகம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகத்திடம் இருந்துதான் அதானி நிறுவனம் 80 சதவீத கடன் வாங்கியுள்ளது. மீதி 20 சதவீத நிதியை அதானி பவர் நிறுவனம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* எதிர்ப்பு ஏன்?
அதானி நிறுவனத்திடம் இருந்து 25 ஆண்டுக்கு ஒப்பந்தம் மின்சாரம் கொள்முதல் செய்ய வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்திய மதிப்பில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் இருந்து ஒரு யூனிட் வாங்க செலவு ரூ.4 மட்டுமே ஆகும் எனவும், இந்தியாவில் வேறு தனியாரிடம் இருந்து யூனிட்டுக்கு ரூ.6 க்கு வாங்கலாம் எனக் கூறி வங்தேச மின் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அடிப்படையில்தான் அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
* எல்லாவற்றிலும் சலுகை… ஆனாலும் கொள்ளை லாபம்
ஜார்க்கண்டில் 50 ஏக்கரில் உள்ள 40 குடும்பங்களை போலீஸ், அதிகார பலத்துடன் விரட்டி அடித்து விட்டு மரங்களை வெட்டி அழித்து விட்டு அதானி மின் ஆலை அமைத்தது. மேலும், அந்த பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் வரிச்சலுகை உட்பட பல்வேறு தாராள சலுகைகள் அதானிக்கு கிடைத்தன. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை காரணம் காட்டியும், வரிச்சலுகைகள் இல்லாமல் உற்பத்தி செய்யும் செலவில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அதானி நிறுவனம் வங்கதேசத்திடம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது.
The post வங்கதேசத்துக்கு மின்சாரத்தை விற்பதில் சிக்கல் வந்ததால் அதானிக்காக திருத்தப்பட்டது சட்டம்: இந்தியாவில் விற்பனை செய்யும் வகையில் விதியை மாற்றிய ஒன்றிய அரசு; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.