சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக


சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக appeared first on Dinakaran.

Related Stories: