இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தென் சென்னை எல்லையில், 18 வயதிலிருந்து 60 வயதிற்கு உட்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் 75% மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய தாய்மார்கள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
இதற்கு, மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யுடிஐடி அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாயாக இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 18 முதல் 60 ஆகும். தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். தென் சென்னையை சார்ந்த தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் வருகிற 19ம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.