சென்னை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்படுவதை கண்காணிக்க ரூ.48 லட்சம் செலவில் 3 ஏடிவி நவீன ரோந்து வாகனங்களை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. சென்னை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை தான். ஆசியாவிலேயே 2வது நீளமான கடற்கரையான மெரினா, சென்னைவாசிகளின் மிகச்சிறந்த சுற்றுலா தலம் என்று சொன்னால் மிகையல்ல.
காற்று புகக் கூட இடம் இல்லாத அளவுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும் கான்கிரீட் கட்டிடங்களுக்குள் வசிக்கும் சென்னை மக்கள் இளைப்பாற அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு படையெடுப்பதை காண முடியும். கடலின் அழகை குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு, அங்குள்ள கடைகளில் விருப்பப்பட்டதை வாங்கி சாப்பிட்டு குழந்தைகளுடனும், உறவினர்களுடனும் பொழுதுபோக்குவதை காணலாம். அதேபோன்று, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், தங்கள் பயண லிஸ்டில் கண்டிப்பாக மெரினா கடற்கரையை வைத்து இருப்பார்கள்.
இதனால், வார நாட்களிலும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னைவாசிகளின் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்துள்ள மெரினா கடற்கரையை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டில் பல மண்டலங்களில் கடற்கரைகளுக்கான திட்டங்கள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன.
எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும். அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ, அதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையும் மக்களை அதிக அளவில் கவரும் கடற்கரையாக மாறியுள்ளது.
மெரினா கடற்கரையில் எந்த அளவுக்கு கூட்டம் இருக்குமோ அந்த அளவுக்கு பெசன்ட் நகர் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. இங்கும் ஏராளமான கடைகள் உள்ளன. கடற்கரைக்கு காற்று வாங்க வரும் மக்கள் இந்த கடைகளில் உணவு பொருட்களை போட்டிப் போட்டு வாங்குவார்கள். சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இவை இருப்பதால் இவற்றின் தூய்மை மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைகளையும் சென்னை மாநகராட்சி ஒழுங்குபடுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியால் அனுமதிக்கப்படாத பகுதிகளில் அவ்வப்போது சிலர் கடைகளை அமைத்து உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் திடக்கழிவு பொருட்களையும் முறையாக அப்புறப்படுத்தாமல், அங்கேயே போட்டு, அப்பகுதிகளை அசுத்தப்படுத்தியும் வருகின்றனர்.
இதனால், சில தினங்களுக்கு முன்பு பெசன்ட்நகர் கடற்கரையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அகற்றியது. இந்த கடைகளை கண்காணிப்பதும், அகற்றுவதும் மாநகராட்சி பணியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. அதனால் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் ரோந்து சென்று கண்காணிப்பதற்காக தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் செலவில் 3 நவீன ரோந்து வாகனங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்ைன மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாகவே சென்னையில் உள்ள கடற்கரைகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதோடு, கடற்கரைகள் அனைத்தையும் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகள் ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுல்ல கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவற்றில் தரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் கண்காணித்து வருகிறோம்.
ஆனாலும் சிலர் எந்தவித அனுமதியும் இல்லாமல் கடைகளை போட்டு விடுகின்றனர். மேலும், சுத்தமான உணவுகளையும் அவர்கள் வழங்குவதில்லை, அந்த கடைகளை முறையாக பராமரிக்காமல் அக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே போட்டு விட்டு இரவோடு இரவாக கடைகளை அப்படியே எடுத்து சென்று விடுகின்றனர். இதுபோன்ற கடைகள் போடுபவர்களை கண்காணிப்பது சவாலான ஒன்றாக உள்ளது.
இப்படி ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அகற்றி வருகிறோம். ஒருமுறை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டால், மீண்டும் அந்த கடைகளை வைக்காமல் இருப்பதை கண்காணிக்க சிரமம் இருந்து வந்தது. இப்போது அவற்றை கண்காணிக்க ஏடிவி என்ற நவீன ரோந்து வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் கடற்கரையில் வேகமாக செல்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இது, தார் சாலைகளிலும், கடற்கரை மணல் பரப்பிலும், கரடுமுரடான பகுதிகளிலும் எளிதில் செல்லக்கூடியது. இந்த வாகனத்தால் எங்கள் கடற்கரை ரோந்து பணிகள் எளிதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை கண்காணிக்க 3 ஏடிவி நவீன ரோந்து வாகனங்கள் appeared first on Dinakaran.