விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 7 இளைஞர்களில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிமாபமாக இறந்தனர். இருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் தகவல் அளித்ததின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து கேள்விப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் போலீசார் காரில் சிதைந்து கிடந்த இளைஞர்கள் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. இளைஞர்கள் உடல் சிதறி இறந்து கிடந்ததை பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த 7 பேரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சிஎஸ்சி டேட்டா சயின்ஸ் (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்) 3ம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் விடுமுறை நாளான நேற்று காரில் திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பும் போது அதிவேகமாக காரை இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது நேருக்கு நேர் அதி வேகத்தில் மோதியதும் தெரியவந்தது.
இந்த விபத்தில் திருப்பதியை சேர்ந்த சேத்தன்(21), யுகேஷ்(21), ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த நிதீஷ்(21), நிதீஷ்வர்மா (21), ராம்கோபால்(21) ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருப்பதியை சேர்ந்த விஷ்ணு(21), பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சைதன்யா(21) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் லாரி மீது மோதிய விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருத்தணி அருகே கோர விபத்து லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல் 5 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி: இருவர் படுகாயம், கோயிலுக்கு சென்று சென்னைக்கு திரும்பியபோது பரிதாபம் appeared first on Dinakaran.