திருப்போரூர்: சென்னையை அடுத்த தாழம்பூர், முல்லை நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசிப்பவர் வரப்பிரசாதம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் தனது மனைவி பார்வதி, மகன் தருண் ஆகியோருடன் ஓஎம்ஆர் சாலையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை 10 மணியளவில் வரப்பிரசாதம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி பார்வதி மற்றும் 2 வயது மகன் தருண் ஆகியோர் மட்டும் இருந்தனர். இந்நிலையில், தருண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் கதவை சாத்தி விட்டு வீட்டிற்கு வெளியே வரப்பிரசாதத்தின் மனைவி பார்வதி வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் குழந்தை கதவைத் தட்டி அழும் சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சிaடைந்த வரப்பிரசாதத்தின் மனைவி பார்வதி கதவை திறக்க முயன்றார்.
ஆனால், குழந்தை கதவை திறக்க முயன்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டது தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கில் குழந்தையிடம் பேசி கதவைத் திறக்க முயன்றனர். நீண்ட நேரமாகியும் திறக்க முடியாததால் சிறுசேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் முதன்மை தீயணைப்பு வீரர் யுவராஜ் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து, ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டின் உள்ளே சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினருக்கு பெற்றோரும் அப்பகுதி பொது மக்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
The post உள்பக்க அறையின் தாழ்ப்பாளை போட்டுக்கொண்ட குழந்தை மீட்பு appeared first on Dinakaran.