பருத்தி ஏற்றுமதி, ஜிஎஸ்டி மற்றும் நூல் விலை உயர்வு அப்போ எங்கே போனீங்க… திடீர் பாசம் காட்டும் அண்ணாமலைக்கு தொழில்துறையினர் பதிலடி

* டாலர் சிட்டியை நலிவடைய செய்தபோது வாய் திறக்காதது ஏன்?
* வங்கதேசத்துக்கு சலுகை வழங்கும்போது குரல் கொடுக்காதவர் இப்போ பேசுவதா?

பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்ற அழைக்கப்படும் திருப்பூர் நகரம் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 54.2 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு அதிக அளவில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்ததாக திருப்பூரில் 1970ம் ஆண்டு தொடங்கிய ஜவுளி தொழில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா தொற்று ஊரடங்கு, பருத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்தாததால் நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நலிவடைய தொடங்கியது.போட்டி நாடான பங்களாதேஷ் நாட்டிற்கு இறக்குமதி வரியை ரத்து செய்து வரிச்சலுகையையும் அளித்ததால் திருப்பூரில் தொழிலை மேலும் நலிவடைய செய்தது. உற்பத்தி மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் குறைவு காரணமாக வங்கதேசத்திலிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு துணிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.

இது இந்திய ஜவுளி தொழிலை அதல பாதாளத்திற்கு தள்ளியது. இதனால், பங்களாதேஷில் இருந்து ஜவுளி ரகங்கள் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் அல்லது வரி விதிக்க வேண்டும் என திருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு திருப்பூரை சேர்ந்த தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக, முன்னெடுப்புகள் இல்லாமல் முன்னேற்றம் எப்படி சாத்தியம் என இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதில், ‘வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக பங்களாதேஷ்க்கு செல்லும் ஜவுளி ஆர்டர்கள் ஜவுளி துறையில் பெயர்பெற்ற திருப்பூருக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். குறைந்தது 10 சதவீதம் ஏற்றுமதிக்கான வாய்ப்பு திருப்பூருக்கு கிடைக்கலாம். ஆனால், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். தொழில் துறையுடன் கலந்து ஆலோசித்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என கூறி உள்ளார்.

இந்த அறிக்கை குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு காரணமாகத்தான் தொழில் வளம் பெருகி வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களும் இங்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். மற்ற மாநிலத்தவர்களும் திருப்பூரில் உள்ள தொழில் திறனை கண்டு அவர்கள் மாநிலத்தில் அதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் பாஜ மாநில தலைவர் ஜவுளித்துறை மீது கொண்ட திடீர் பாசத்தால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால், பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி கொரோனா தொற்று ஊரடங்கு பல்வேறு பிரச்னைகளால் தொழில் நலிவடைந்தது. இந்த தொழில் அதல பாதாளத்திற்கு தள்ளியதற்கு முக்கிய காரணமான பருத்தி ஏற்றுமதி தடை செய்ய வேண்டும். பங்களாதேஷிற்கு அளித்த வரிச்சலுகை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திய போது அண்ணாமலை ஏன் ஒன்றிய அரசிடம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வலியுறுத்தவில்லை.
அவ்வாறு அவர் வலியுறுத்தி வரிச்சலுகை ரத்து செய்து இருந்தால் பங்களாதேஷில் இருந்து துணிகள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ஜவுளி தொழில் இப்போது உள்ள வளர்ச்சியை விட பல மடங்கு வளர்ச்சி பெற்றிருக்கும். அதை விட்டு தற்போது அரசியலுக்காக அர்த்தமற்ற அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

* அண்ணாமலையை கிழித்த மக்கள்
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கமெண்ட் செய்துள்ள சிலர் ஒன்றிய அரசின் நடவடிக்கை காரணமாகத்தான் ஜவுளி தொழில் வீழ்ச்சி அடைந்ததை ஆதாரத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். மேலும், சிலர் இதே கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துங்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.

* ஆர்டர்களை எதிர்பார்க்க முடியாது
வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல் காரணமாக இந்தியாவிற்கு முழு அளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என நம்ப முடியாது. இந்தியாவில் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதனை விரும்பி தொடர்ந்து இந்தியாவிற்கு ஆடர்களை வழங்கி வருகிறது. ஆனால், பங்களாதேஷ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிடம் தரக்கட்டுப்பாடு எதிர்பார்க்க முடியாது. வங்கதேசத்திற்கு செல்லக்கூடிய புதிய ஆர்டர்கள் இந்தியாவிற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்யும் ஆர்டர்கள் இந்தியாவிற்கு முழுவதுமாக கிடைப்பதை எதிர்பார்க்க முடியாது என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

The post பருத்தி ஏற்றுமதி, ஜிஎஸ்டி மற்றும் நூல் விலை உயர்வு அப்போ எங்கே போனீங்க… திடீர் பாசம் காட்டும் அண்ணாமலைக்கு தொழில்துறையினர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: