நான்கு சந்திப்பு சாலையில் விபத்தை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

மண்டபம்: புதுமடம்,திருப்புல்லாணி பகுதிகளுக்கு செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க சிக்னல் அமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே புதுமடத்திற்கு செல்ல ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி பகுதியில் இருந்து பிரிவு சாலை செல்கிறது. அதுபோல ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், திருப்புல்லாணி உத்திரகோசமங்கை கோவிலுக்கு செல்வதற்கு ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரப்பன்வசை பகுதியிலிருந்து பிரிந்து நொச்சுயூரணி ஊராட்சி பகுதி வழியாக புதுமடம் சாலையை கடந்து திருப்புல்லாணி பகுதிக்கு செல்கின்றனர்.

உச்சிப்புளி,நொச்சுயூரணி, திருப்புல்லாணி, புதுமடம் ஆகிய பகுதிகள் கடந்து செல்லும் இந்த சாலை, நான்கு சந்திப்பு சாலையாக புதுமடம் பகுதியில் அமைந்துள்ளது. ஆதலால் இந்த நான்கு சந்திப்பு சாலையில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களும் கடந்து செல்லுகின்றன. அதுபோல தாமரைக்குளம் இரட்டையூரணி, காரான், கும்பரம், வெள்ளரி ஓடை கோரவல்லி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும் மருத்துவ, வர்த்தக ரீதியாகவும் உச்சிப்புளி பகுதிக்கு வருவதற்கு இந்த புதுமடம் நான்கு சந்தித்து சாலை வந்து தான் செல்ல வேண்டும். ஆதலால் இந்த நான்கு பகுதிகளில் சந்திக்கும் சாலை மிக முக்கிய சாலையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அதுபோல பெரிய வாகனங்களும் சில நேரங்களில் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. இங்கு பெரிய அளவில் விபத்துக்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு வாகன வழிகாட்டி சிக்னல் அமைக்க, போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டுனர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நான்கு சந்திப்பு சாலையில் விபத்தை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: