அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரம்; விற்பனை அதிகரிப்பால் சாப்பிடுவோர் எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரிப்பு

* டோக்கனுக்கு பதிலாக பில்லிங் மெஷின் வாங்க முடிவு

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், விற்பனை அதிகரிப்பால் உணவருந்துவோர் எண்ணிக்கை 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கிராமப்புற ஏழைகளுக்கான உணவை உறுதி செய்வதற்கென்று பல்வேறு திட்டங்கள் இருந்து வருகின்றன. அதே நேரத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 வேளை உணவை உறுதிபடுத்த, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் முதன் முறையாக மலிவு விலை அம்மா உணவகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். அம்மா உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இத்திட்டம் தமிழகம் முழுவதும் பிற மாநகர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதில் சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் இருக்கும் 200 வார்டுகளுக்கு 2 உணவகங்கள் விகிதம் 400 உணவகங்களும், முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜிவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 7 என மொத்தமாக 407 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டன. தற்போது 388 இடங்களில் சென்னையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ₹1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ₹5, 2 சப்பாத்தி ₹3 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், மழை வெள்ளப் பாதிப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அம்மா உணவகம் சென்னைவாசிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது. தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர்.

ஆனால் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகங்கள் தொடர் வருவாய் இழப்பால் ஆண்டுக்கு ₹300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அம்மா உணவகங்களை பராமரிப்பு இல்லாமல் இருந்தது. மேலும், அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட போது வாங்கப்பட்ட பாத்திரங்கள், இயந்திரங்கள் பழுதானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கஷ்டப்பட்டனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்குப் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

எனினும் அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இதுநாள்வரை பராமரிப்பு செய்யாமல் பாழடைந்த நிலையில் கிடந்தது. பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன. பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன. மேலும், பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள் உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பெரும்பாலான அம்மா உணவகங்களில் முன்பு போல அதிகளவில் உணவுகள் விற்பனையாவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உணவகங்களில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது. சமையல் பாத்திரங்கள் ஓட்டை உடைசலாக மாறியது. அம்மா உணவகங்களை பராமரித்து சீரமைக்க முடியாத நிலையில் சாப்பிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு 75 ஆயிரம் பேர் மட்டுமே சாப்பிட்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். உணவின் தரத்தை ஆய்வு செய்தபோது அவற்றின் நிலையை அறிந்து அம்மா உணவகங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா உணவகங்களை சீரமைக்க ₹7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேதம் அடைந்த பாத்திரங்கள், இயந்திரங்களை மாற்றி புதிதாக வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து தரத்தை உயர்த்த வேண்டும் என்ற முழு வேகத்துடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

அம்மா உணவகங்களில் சேதம் அடைந்த பாத்திரங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. எந்தெந்த பொருள் வாங்க வேண்டும் என்ற விவரங்களை மண்டல அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ₹2 லட்சம் வீதம் செலவிட தீர்மானிக்கப்பட்டு, புதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரம், சப்பாத்தி இயந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்க பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பில்லிங் மெஷின் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக பில்லிங் இயந்திரம் புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே, கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. எதிர்க்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், மக்கள் பசியை ஆற்றி வரவேற்பைப் பெற்ற திட்டம் என்பதால், திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் புத்துயிர் பெற்று வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் மாநகராட்சி
அம்மா உணவகம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முதல்வரின் உத்தரவுப்படி அம்மா உணவகங்களை சீரமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 388 உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பொருட்கள் எல்லாம் பழுந்தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய பாத்திரங்கள் விரைவில் வாங்கப்படுகிறது. மேலும் தரமான உணவு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மா உணவகங்கள் அனைத்தும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. தற்போது அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால், இந்த உணவகங்களில் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் 75 ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த உணவகங்கள் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். எனவே அம்மா உணவகங்களின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரம்; விற்பனை அதிகரிப்பால் சாப்பிடுவோர் எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: