×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் அதிரடி கைது

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கொலைக்கு மூளையாக செயல்பட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை தனிப்படை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை திட்டமிட்டது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கூடுதல் டிஜிபி அருண் புதிய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற நாள் முதல் அருண், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரன் பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷ் மைத்துனரான வக்கீல் அருள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அதிமுக வழக்கறிஞரான பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவி மலர்கொடி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அரிஹரன் மற்றும் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ துணை தலைவர் அஞ்சலை ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பணம் கொடுத்து உதவியது தெரியவந்தது. பாஜ மகளிர் அணி நிர்வாகி அஞ்சலை உள்ளிட்டோரை தனிப்படையினர் கைது செய்தனர்.

6 வழக்கறிஞர்கள் உட்பட 21 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னை பாலு, மைத்துனர் அருள், ராமு, வக்கீல் சிவா, அதிமுக கவுன்சிலர் அரிதரன் என 5 பேரை தனிப்படையினர் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் காவலில் எடுத்து எழும்பூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலு, மைத்துனர் அருள் ஆகியோர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை தெரிவித்தனர். பெரும்புதூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு பல நூறு கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்க இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள அஸ்வத்தாமன் ஈடுபட்டுள்ளார். பிரபல அரசியல் கட்சி பிரமுகரும் இதற்கு பல வகையில் உதவி செய்துள்ளார். இதற்காக போலி ஆவணம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது தொழிலதிபருக்கு தெரியவந்தது. உடனே தொழிலதிபர், ரவுடியான பாஜ பிரமுகர் மின்ட் ரமேஷ் உதவியை நாடியுள்ளார். அவர் மூலம் மூலப்பத்திரத்துடன் அந்த தொழிலதிபர் ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்தார்.

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் இந்த நில பிரச்னையில் தலையிட்டு, காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். இது அஸ்வத்தாமன் தந்தையான பிரபல வட சென்னை தாதாவும் தற்போது வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளவருமான நாகேந்திரனுக்கு தெரியவந்தது. உடனே நாகேந்திரன், சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு, ‘எனது மகன் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். இதில் இருந்து நீ வெளியேற வேண்டும்’ என மிரட்டியுள்ளார். அதற்கு ஆம்ஸ்ட்ராங் இந்த பிரச்னனையில் நான் தலையிடவில்லை. நிலத்திற்கான மூலப்பத்திரம் எங்களிடம் உள்ளது. தேவையில்லாமல் உன் மகன் நிலத்தை அபகரிக்க முயல்கிறார். உன் மகனை இதிலிருந்து விலகி போகச் சொல் என்று கூறியுள்ளார். அதற்கு நாகேந்திரன், இந்த நிலத்தை முடித்து கொடுத்தால் எனது மகனுக்கு ரூ.25 கோடி வரை பணம் கிடைக்கும். இல்லை என்றால் ரூ.25 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆம்ஸ்ட்ராங் வேறு ஒரு வழியில் அந்த பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம், தற்போது இந்த பிரச்னையில் தலையிட வேண்டாம் கூறியுள்ளார்.

இதனால் நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டது. கடந்த 2023ம் பிப்ரவரி மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் செய்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரை அஸ்வத்தாமன் காரில் கடத்தி துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ், ஆம்ஸ்ட்ராங் உதவி மூலம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, அஸ்வத்தாமனை கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து காரில் வந்த போது போலீசார் கைது ெசய்ததால், ஆம்ஸ்ட்ராங் மீது நாகேந்திரனுக்கு கோபம் இருந்தது. தொடர்ந்து தனது மகன் அஸ்வத்தாமன் விஷயத்தில் முட்டுக்கட்டை போட்டு வரும் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க நாகேந்திரன் முடிவு செய்தார். அதேநேரம், ஆற்காடு சுரேஷ் தரப்பினர் மற்றும் பிரபல தாதா சம்பவ செந்தில் தரப்பினர் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க கடந்த 6 மாதங்களாக பல வகையில் முயற்சி செய்து வருவது, நாகேந்திரனுக்கு தெரியவந்தது. உடனே நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆற்காடு சுரேஷ் மைத்துனர் வக்கீல் அருளிடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எனது மகன் அஸ்வத்தாமன் உதவி செய்வார் என்றும், எனவே எனது மகனை நேரில் சென்று சந்திக்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி வக்கீல் அருள் 2 முறை அஸ்வத்தாமனை நேரில் சென்று பார்த்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான நிதி உதவியை பெற்றுள்ளனர்.

அப்போது அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய தேவையான உதவிகளை நான் செய்வதாகவும், மேலும் உதவிக்கு சம்பவ செந்தில் ஆட்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று யோசனை கொடுத்துள்ளார். அதன் பிறகு, வக்கீல் அருள், தாதா சம்பவ செந்திலுடன் தொடர்பில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அரிகரனையும் சந்தித்து பேசியுள்ளார். வேலூர் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாகேந்திரன் ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்வதற்கு அனைத்து உதவிகளையும் அஸ்வத்தாமன் செய்து கொடுத்து விட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒன்றும் தெரியாதபடி மலேசியா தப்பி சென்று விட்டார். அதன் பிறகு ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் யாருக்கும் தன் மீது சந்தேகம் வரவில்லை என்று நம்பி, கடந்த வாரம் அஸ்வத்தாமன் சென்னை வந்தார். ஏற்கனவே வக்கீல் அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் படி தனிப்படையினர் அஸ்வத்தாமனை கடந்த 2 நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி, அவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்வத்தானை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். ரவுடி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் அளித்திருந்தார். தற்போது அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளதால், கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 34 நாட்கள் ஆகிறது. இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இறுதி கட்டத்தை போலீசார் நெருங்கியுள்ளனர். இந்த வழக்கில் கைதான அஸ்வத்தாமன் பல முக்கிய தகவல்களை விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் முக்கிய புள்ளிகள் சிலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Youth Congress ,general secretary ,Aswathaman ,Chennai ,Armstrong ,Bahujan Samaj Party ,president ,Perambur ,Congress ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர்...