×

ரூ.1000 உரிமைத்தொகை ஓட்டுக்காக அல்ல பெண்களின் முன்னேற்றத்துக்கு வழங்கும் தாய் வீட்டு சீதனம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை: தாய்மார்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது ஓட்டுக்காக அல்ல. பெண்களின் முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய தாய் வீட்டு சீதனம் என்று திருவண்ணாமலையில் நடந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் குழுக்களுக்கு ரூ.136.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பெண்கள் முன்னேற வேண்டும் என அயராது உழைத்தனர். பெண்கள் படிக்க வேண்டும் என விரும்பினர். அவர்களது வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மகளிர் குழுக்கள் செயல்பாடுகளில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே சிறப்பாக உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகையின்போது, தாய்வீட்டில் இருந்து வரும் ஒரு சேலையும், பத்து ரூபாயும்தான் சீதனம் என்ற நிலையை மாற்றி, தாய் வீட்டு சீதனமாக மாதந்தோறும் தாய்மார்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகையை வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டம் ஓட்டுக்காக அல்ல. பெண்களின் முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய தாய் வீட்டு சீதனம்.
கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் வழியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் விழா இன்று நடக்கிறது. தமிழ்நாட்டில் மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் வழங்கப்படும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

The post ரூ.1000 உரிமைத்தொகை ஓட்டுக்காக அல்ல பெண்களின் முன்னேற்றத்துக்கு வழங்கும் தாய் வீட்டு சீதனம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,AV ,Velu ,Thiruvannamalai ,Dravidian movement ,Tiruvannamalai Collector ,E. V. Velu ,
× RELATED தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக...