×

மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று மருமகன் தற்கொலை

திருப்பூர்: மாமனாரை 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அதே துப்பாக்கியால் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே எல்லப்பாளையம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (70), விவசாயி. இவரது மகள் அம்பிகா (45). மகன் ரவிபிரசாத் (40). அம்பிகாவின் கணவர் படியூரை சேர்ந்த ராஜ்குமார் (50). ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளர். இவர்களுக்கு இந்துஜா (18) என்ற மகளும், ஜனந்த் (15) என்ற மகனும் உள்ளனர். குடும்பம் மற்றும் சொத்து பிரச்னையால் ராஜ்குமார், மனைவி அம்பிகாவை தாக்கியதாக தெரிகிறது. இதனை பழனிச்சாமி கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார், மாமனாருடன் பேசுவதை நிறுத்தினார். மனைவி, குழந்தைகளையும் அவருடன் பேசக்கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.இதனால், குடும்பத்தினர் கடந்த 6 ஆண்டாக பழனிச்சாமியுடன் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கோயில் நிகழ்ச்சிக்கு அம்பிகா சென்றார். அப்போது, அவரது தந்தை பழனிச்சாமியும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். 6 ஆண்டுகளாக பேசாமல் இருந்த தந்தையும், மகளும் மனம் விட்டு பேசினர்.

நாம் பேசியது உனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக்கொள். தெரிந்தால் பிரச்னை செய்வார் என்று தந்தை எச்சரித்துள்ளார். அதன்பின், அம்பிகா வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே, அம்பிகா தந்தையுடன் எடுத்த போட்டோவை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.  ராஜ்குமார் தற்செயலாக மனைவியின் செல்போனை பார்த்தபோது மாமனாருடன் போட்டோ எடுத்திருப்பதை கண்டு ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்தார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்தனர்.

இந்த பிரச்னைக்கு எல்லாம் மாமனார் தான் காரணம் என்று நினைத்த ராஜ்குமார், அவரை கொலை செய்ய முடிவு செய்து நேற்று காலை கைத்துப்பாக்கியுடன் மாமனார் பழனிச்சாமி ஊருக்கு சென்றார். அங்கு மாமனார் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.  அப்போது ராஜ்குமார், எப்படி நீ என் மனைவியிடம் பேசலாம் என்று கேட்டு சண்டை போட்டு, துப்பாக்கியால் மாமனாரை நோக்கி 5 முறை சுட்டார். துப்பாக்கி குண்டுகள் பழனிச்சாமியின் உடலை துளைத்து கொண்டு வெளியேறியது.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். வீடு திரும்பிய ராஜ்குமார் மனைவி, குழந்தைகளுடன் பேசாமல் அமைதியாக இருந்தார். மாமனாரை சுட்டு கொலை செய்தது வெளியில் தெரிந்தால் போலீசார் கைது செய்வார்களே என்ற பயத்தில் துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டுக்கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைக்கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் மற்றும் ஊதியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று மருமகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Palanichamy ,Ellappalayambutur ,Kangayam, Tirupur district ,Ambika ,
× RELATED திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்