×

கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்தபோது மின்சாரம் தாக்கி தம்பதி பலி: ஒரே மகள் கதறல்

நாகர்கோவில் செப்.10: நாகர்கோவிலில் வீட்டில் கொடிக்கயிற்றில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகில் உள்ள திலகர் தெருவை சேர்ந்தவர் மணி (51). கோட்டாரில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா (46). கல்லூரி அலுவலக ஊழியர். இவர்களது மகள் சரோஜினி (21) கோணம் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் கொடிக்கயிற்றில் துணிகளை காயப்போட்டு இருந்தனர். நேற்று காலை 5.30 மணியில் அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் காய போட்டு இருந்த துணியை எடுப்பதற்காக நீலா வேகமாக சென்றார். வேக வேகமாக துணிகளை எடுத்தபோது திடீரென அந்த பகுதியில் உள்ள மின் ஒயரில் மழையில் நனைந்த துணி விழுந்துள்ளது. இதை எடுக்க முயன்ற போது நீலா மீது மின்சாரம் தாக்கி மயங்கினார். நீண்ட நேரம் ஆகியும் நீலா வராததால் மனைவியை தேடி சென்ற மணி, மயங்கி கிடந்த நீலாவை தூக்க முயன்றுள்ளார்.

இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து மயங்கினார். தாய், தந்தை இருவரையும் நீண்ட நேரமாக காண வில்லையே என நினைத்து, மகள் பின்புற பகுதிக்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது இருவரும் அருகருகே மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் இருவருமே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்தபோது மின்சாரம் தாக்கி தம்பதி பலி: ஒரே மகள் கதறல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Mani ,Thilakar Street ,Nagaraja Temple ,Nagarkot.… ,
× RELATED நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்...